This article is from Jul 10, 2020

கோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.

பரவிய செய்தி

இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இல்லாத தனியார் கோவில் (வணீக ரீதியான மின் இணைப்பிற்கு) 0 முதல் 100 யூனிட் வரை ரூ.5.00, 100 யூனிட்க்கு மேல் ரூ.8.05 என ஆர்.டி.ஐ தகவலில் வெளி வந்துள்ளது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், சர்ச், மசூதிக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஆண்டில் இருந்தே சர்ச்சை எழுந்தது. கோவில்களுக்கு ஒரு யூனிட்க்கு ரூ.8, சர்ச் மற்றும் மசூதிக்கு ரூ.2.85 என பாகுபாடு காட்டி கட்டணம் வசூலிப்பதாக வைரல் செய்தனர். இந்த வதந்தி பின்னாளில் இந்திய அளவில் பரவியது குறிப்பிடத்தக்கது. இதற்கு அனைத்து பொது மத வழிபாட்டுத்தலங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 , சர்ச் மசூதிக்கு ரூ.2.85 என பாகுபாடா ?

Twitter link | archive link 

ஆனால், தற்போது கோவில்கள், சர்ச், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்கு வழங்கப்படும் மின்சார கட்டண விவரம் குறித்து பெறப்பட்ட ஆர்.டி.ஐ தகவல் சர்ச்சையாகி உள்ளது. திருவாரூர் அகில பாரத இந்து மகா சபாவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்த மனுவிற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவாரூரின் செயற்பொறியாளர் (இயக்குதலும் & பராமரித்தலும்) மூலம் கிடைத்த பதிலே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், மனுதாரரின் 20.11.2019 நாளிட்ட கடிதம் வாயிலாக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் கேட்கப்பட்ட தகவல்களுக்கு கீழ்கண்டவாறு பதில் வழங்கப்படுகிறது.

1.இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமாக நேரடியாக இயங்கும் கோவில்

2.இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பு (supervisor) மட்டும் கீழ் உள்ள கோவில்

4.இஸ்லாம் மார்கம் மசூதி பள்ளிவாசல் வழிபாட்டுத்தலம்

5.கிறித்தவ (church, தேவாலயம்) வழிபாட்டுத்தலம் என அணைத்து மத பொது வழிபாட்டுத்தலங்களுக்கும் 1 யூனிட் மின்கட்டண விவரம் 0 முதல் 120 யூனிட் வரை ரூ.2.85 பைசா , 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75 பைசா

3.இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இல்லாத தனியார் கோவில் (வணிக ரீதியான மின் இணைப்பிற்கு) 0 முதல் 100 யூனிட் வரை ரூ.5.00, 100 யூனிட்க்கு மேல் ரூ.8.05 பைசா என்ற தகவல் அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலில் இருந்து முதலில் புரிந்து கொள்ள வேண்டியது முன்பு கூறியது போல் அனைத்து கோவில்களுக்கு ஒரு யூனிட் 8 ரூபாய் ஆகவும், சர்ச் மற்றும் மசூதிக்கு 2.85 ரூபாய் ஆகவும் பாகுபாடு காட்டுவதாக கூறிய தகவல் தவறு என புரிந்து கொள்ள முடிகிறது. இந்து சமய அறநிலைய துறையின் நேரடி கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இயங்கும் அனைத்து கோவில்களுக்கும் 0 முதல் 120 யூனிட் வரை ரூ.2.85 என்ற அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மதங்களை சேர்ந்த பொது வழிபாட்டுத்தலங்களுக்கும் அதே கட்டணம் என அறிய முடிகிறது.

இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இல்லாத தனியார் கோவில்களுக்கு வணிக ரீதியான மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய கோவில்களுக்கு ஆரம்பமே ஒரு யூனிட்க்கு 8 ரூபாய் என வசூலிக்கப்படவில்லை. அவைகளுக்கு 0 முதல் 100 யூனிட் வரை ரூ.5.00, 100 யூனிட்க்கு மேல் ரூ.8.05 பைசா வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இயங்காத சிறியது முதல் பெரியது வரை ஏராளமான கோவில்கள் இங்குள்ளன. அவை தனியார் அமைப்புகள் அல்லது தனி நபர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி வணிக ரீதியில் இணைப்பை பெறும் கோவில்களுக்கு மட்டுமே இக்கட்டணம் முறையா அல்லது சர்ச் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட பிற மதங்களுக்கும் இது பொருந்துமா என அறிந்து கொள்ள ஆர்.டி.ஐ தகவல் இடம்பெற்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவாரூரின் செயற்பொறியாளர் மதிவாணன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது,

”  இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் வரும் கோவில்களுக்கும், தனியார் கோவில்களுக்கும் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பொது வழிபாட்டுத்தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால், வீட்டில் கட்டப்பட்ட சின்ன சின்ன கோவில்கள், தங்களுக்கென கட்டிக் கொண்ட கோவில்கள், தனியார் அமைப்புகள் அல்லது பொது வழிபாடு இல்லாத கோவில்களுக்கு கட்டணத்தில் மாற்றம் இருக்கிறது. அதேபோல், சர்ச், மசூதி உள்ளிட்ட பிற மதங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களும் பொது வழிபாடாக இருந்தால் அரசு நிர்ணயித்த கட்டணமும், பொது வழிபாடு இல்லாமல் வணிக ரீதியில் இணைப்பு இருந்தால் தனியார் கோவில் கட்டணமும் வசூலிக்கப்படும் ” எனக் கூறியுள்ளார்.

வணிக ரீதியிலான இணைப்பை பெற்ற கோவில்கள், சர்ச், மசூதி உள்ளிட்ட பிற மதத்தின் வழிபாட்டுத்தலங்களுக்கும் கட்டணத்தில் வேறுபாடு இருப்பதாக செயற்பொறியாளர் அளித்த தகவல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தனியார் வழிபாட்டுத்தலங்களுக்கும் (உதாரணத்திற்கு ஈஷா மையம் , ஜெபக் கூடம் கட்டிடங்கள், வீடுகளில் அமைக்கப்பட்ட சிறு சிறு கோவில்கள்), பொது வழிபாட்டுத்தலங்களுக்கும் இடையே மின்சாரக் கட்டணத்தில் வேறுபாடு இருக்கிறது.

டெல்டா இந்து மகா சபா எனும் முகநூல் பக்கத்தில், இந்து சமய அறநிலைய துறை கீழ் இயங்கும் கோவில், இந்து சமய அறநிலைய துறை கீழ் இல்லாத தனியார் கோவில் என பாகுபாடு காட்டாமல் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்குமாறு ஆர்.டி.ஐ தகவலை இணைத்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Facebook link | archive link 

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டண வேறுபாடு அனைத்து மதங்களின் பொது வழிபாட்டுத்தலங்களுக்கும், வணிக ரீதியில் இணைப்பை பெற்ற அனைத்து மத தனியார் வழிபாட்டுத்தலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் என புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader