உலக பயங்கரவாத பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் இடம்பெற்றதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

ஆஸ்திரேலியாவைத் தலைமை இடமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) “உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2023” என்ற  அறிக்கையை வெளியிட்டுள்ளது. 20 கொடிய பயங்கரவாத அமைப்புக் குழுக்களில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)’ 12வது இடத்தில் இருக்கிறது. பினராயி விஜயன் போன்ற தலைவர்களுக்கு நன்றி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஸ்திரேலியாவின் சிட்னியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) உலக பயங்கரவாத குறியீடு என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் உலகளாவிய கொடிய பயங்கரவாத குழுக்கள் (GTI – Global Terrorism Index) என 20 அமைப்புகளைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 12வது இடத்தில் இருப்பதாகப் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி சார்பில் முதலமைச்சராக இருக்கும் பினராய் விஜயன் போன்ற தலைவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிடப்பட்டு பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன ?

பரப்பட்டும் பட்டியலில் ‘DEADLIEST TERROR GROUPS OF 2022’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அமைப்பின் பெயர், அவர்கள் நடத்திய தாக்குதல்கள், அதன்மூலம் இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தலைப்பினை கொண்டு இணையத்தில் தேடியதில், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ 2023, மார்ச் 16ம் தேதி வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று கிடைத்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

அக்கட்டுரையில், பயங்கரவாத குழுக்கள் பட்டியலில் (2022ம் ஆண்டு தரவுகள்) அல்-கொய்தா 13வது இடத்திலும், லஷ்கர்-இ-தொய்பா 16வது இடத்திலும் உள்ளது. இவற்றைவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. மேலும், அவ்வமைப்பு கடந்த ஆண்டு 61 தாக்குதல்களை நடத்தியதாகப் பொறுப்பேற்று இருக்கிறது. அதில் 39 பேர் இறந்தும், 30 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

மாவோயிஸ்ட் என்பது கம்யூனிஸ்ட் அமைப்புகளில் ஒரு பிரிவினராவர். உதாரணமாக மார்க்சிஸ்ட், மார்க்ஸ்  – லெனினிஸ்ட் போல மாவோயிஸ்டும் ஒரு பிரிவாகும். மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதல்கள் என ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையும், சமூக வலைத்தளங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எனப் பரவும் படத்தில் உள்ள எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளது.

இது குறித்து மேற்கொண்டு தேடியதில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் கட்டுரை ஒன்று கிடைத்தது. மார்ச் மாதம் 17ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அக்கட்டுரையில், இந்த குறியீடு டிராகன்ஃபிளை (Dragonfly) எனும் நிறுவனம் பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 தேதி முதல் வைத்துள்ள தரவுகள் மற்றும் பிற ஆதாரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய கட்சி எப்படி உலக பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தரப்பிலிருந்து IEP, GTI மற்றும் டிராகன்ஃபிளை ஆகியவற்றிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தங்களது தரவு ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மாவோயிஸ்ட்’ என்ற குழுவையே குறிக்கிறது என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என பரவிய தவறான செய்திக்கு தங்களது தவறுதான் காரணம் என்றும் டிராகன்ஃபிளை  ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், நீங்கள் குறிப்பிடுவது போல ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சிதான். அது சிபிஐ-மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத அமைப்பு அல்ல. இந்த குழப்பம் ‘மாவோயிஸ்ட்’ என்ற முக்கிய வார்த்தையைத் தவறவிட்டதினால் ஏற்பட்ட குழப்பம் என மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளனர்.

திருத்தப்பட்ட பட்டியல்

இதனைத் தொடர்ந்து IEP வெளியிட்ட அறிக்கையைத் தேடிப் பார்க்கையில், அதிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. அவ்வறிக்கையின் 12வது பக்கத்தில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மாவோயிஸ்ட்’ என மாற்றப்பட்டுள்ளது. 

டைம்ஸ் ஆஃப் இந்தியா

இதையடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியிலும் தவறை சுட்டிக்காட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மாவோயிஸ்ட் என மாற்றி உள்ளனர். 

தடை செய்யப்பட்ட அமைப்புகள் : 

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 பிரிவு 35ன் படி இந்தியாவில் 39 அமைப்புகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டும்’ இடம்பெற்றுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச பயங்கரவாத பட்டியலில் 12வது இடத்தில் இருப்பதாகப் பரவும் செய்தி உண்மையல்ல. அது மாவோயிஸ்ட் அமைப்பினர் பற்றிய தகவலாகும். உலக பயங்கரவாத குறியீட்டை வெளியிட்ட நிறுவனம் தனது தவறினை உணர்ந்து தனது அறிக்கையில் திருத்தம் செய்துள்ளதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader