பெரிய கோவில் குடமுழுக்கிற்கு நாம் தமிழர் கட்சி நன்கொடை வசூலித்ததா ?

பரவிய செய்தி
இந்து அறநிலையத்துறை நடத்தும் விழாவிற்கு நாம் தமிழர் ஏன் அமௌன்ட் வசூல் பண்ணனும்.
மதிப்பீடு
விளக்கம்
கிஷோர் கே சுவாமி என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்து அறநிலையத்துறை நடத்தும் தஞ்சை பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நன்கொடை வசூலிப்பதாக ஓர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த நன்கொடை வசூலிக்கும் ரசீது முகநூலில் மீம்ஸ் வடிவிலும் பரப்பப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் பெயரில் இருக்கும் நன்கொடை ரசீதில் ” பேரரசன் பெருவிழா ” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு நன்கொடை வசூல் செய்தால் பேரரசன் பெருவிழா எனக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் என்று எங்களுக்கு மட்டுமின்றி அந்த பதிவின் கமெண்ட்களிலும் கேட்கப்பட்டு இருந்தது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ” பேரரசன் பெருவிழா ” நன்கொடை வசூல் குறித்து ஆராய்ந்து பார்த்த பொழுது, 2019 செப்டம்பர் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் இணையதளத்தில் 2019 அக்டோபர் 5-ம் தேதி தஞ்சையில் நடக்கவிருக்கும் பேரரசன் பெருவிழா குறித்த அறிவிப்பு உடன் நிகழ்ச்சி அழைப்பிதழும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதேநாளில் வெளியான சுற்றறிக்கை அடங்கிய செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தமிழர் பண்பாட்டு மீட்பு பாசறையான வீரத்தமிழர் முன்னணி சார்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 05-ம் தேதி தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் அரசருக்கு அரசன் தமிழ்ப் பேரரசன் அருண்மொழிச்சோழன் பெரும்புகழ் போற்றும் நிகழ்வு பேரரசன் பெருவிழாவாக கொண்டாடப்படவிருக்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பொறுப்பாளர்கள் தங்களுடைய தொகுதி சார்பாக திரட்டிய நிதியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் முன்னிலையில் பெருவிழா நன்கொடையாக கையளித்து உதவும்படி வேண்டப்படுகிறது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தொகை குறித்த விவரங்களும் சுற்றறிக்கை உடன் கூடிய செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நன்கொடை ரசீது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” பேரரசன் பெருவிழா என்று ராஜராஜசோழனுக்கு விழா நடத்த திட்டமிட்டோம். அதன்பிறகு தொடர்ச்சியாக போராட்ட களம், பிரச்சனைகள், சிக்கல்கள் சூழ்ந்ததால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. அப்பொழுது அடிக்கப்பட்டது தான் இந்த ரசீது. பேரரசன் பெருவிழா நாம் நடத்தவிருந்த விழா. இப்பொழுது நடக்கும் குடமுழுக்கு விழாவிற்கு பேரரசன் பெருவிழா என ரசீது அடிக்க அவசியமில்லை ” எனக் கூறியிருந்தார்.
கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு, வளர்ச்சி பணிகளுக்கு தங்களின் ஆதரவாளர்களிடம் அல்லது மக்களிடம் நன்கொடை பெறுவதை சிறு கட்சி முதல் தேசிய கட்சி வரை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நம்முடைய தேடலில், 2019 அக்டோபர் மாதம் தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த பேரரசன் பெருவிழா எனும் நிகழ்ச்சிக்காக நன்கொடை வசூலிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அப்பொழுது அடிக்கப்பட்ட ரசீதை தஞ்சைப் பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்காக நாம் தமிழர் கட்சியினர் நன்கொடை பெறுவதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.