தஞ்சைப் பெரிய கோவிலின் பராமரிப்பு பணி தொடர்பான சர்ச்சை..!

பரவிய செய்தி
தொல்லியல் துறை பராமரிப்பு என்ற பெயரில் இராசராச சோழர் கட்டிய தஞ்சைப் பெரியக் கோவிலின் சிறு குறு சிலைகள் மொத்தமாக தகர்த்து அகற்றப்படும் பேரவலம். பராமரிப்பு என்கிற பெயரில் வரலாற்று பொக்கிஷத்தை அழிக்கும் இவர்களின் செயலை மக்களுக்கு தெரிவிக்க அதிகம் பகிரவும்.
மதிப்பீடு
விளக்கம்
சோழப் பேரரசின் வரலாற்று சின்னமாக நிலைத்து நிற்கும் மாமன்னர் இராசராச சோழர் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் தொல்லியல் துறை சார்பில் நிகழ்ந்து வரும் பராமரிப்பு பணிகளின் பொழுது கோவிலில் உள்ள சிறு சிறு சிலைகள் உடைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்ணெதிரே அழிக்கப்படுவதை அனுமதிக்க இயலாது என சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவுவதை பார்க்க முடிகிறது.
இந்த செய்தியின் உண்மைத்தன்மையை பற்றி அறிந்து கொள்வதற்கு Youturn குழுவில் இருந்து ஒருவர் தஞ்சைக் கோவிலுக்கு நேரில் சென்றே அங்கு நிகழ்ந்து வரும் பராமரிப்பு பணிகளை கண்டு வந்துள்ளார். மக்கள் அச்சம் கொள்ளும் விதத்தில் அங்கு எவ்வித நிகழ்வும் நடைபெறவில்லை. அதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தஞ்சைப் பெரிய கோவிலில் எப்பொழுதும் போல திருப்பணிக்காக வழக்கமான பணிகளை தொடங்கியுள்ளனர்.
விரைவில் தஞ்சைப் பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதால் அதற்காக திருப்பணிகளைத் தொடங்கியுள்ளனர். கோவில் அமைந்து இருக்கும் பரப்பளவு அதிகம் என்பதால் வெயில் அதிகம் இருக்கும் பொழுது கோவிலின் நடைப்பாதையில் சுற்றி வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆகையால், அந்த சூட்டை தவிர்க்கும் விதத்தில் தளம் அமைப்பதற்காக தளத்தில் இருக்கும் செங்கற்களை பெயர்த்து எடுத்துள்ளனர். அதற்கு பதிலாக புதிதாக தட்டு ஓடுகளோ அல்லது செங்கற்களை கொண்டு தளம் அமைப்பது அவர்களது இலக்காக இருக்கலாம். மேலும், புல்தரையும் அமைப்பது, மழைநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய உள்ளனர்.
தொல்லியல் துறையை சேர்ந்தவர்களிடம் YOUTURN பேசுகையில் இது போல் ஏற்கனவே சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக சேதம் இருந்தால் அறநிலைய துறையிலிருந்து தகவல் தெரிவித்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சிதலமடைந்தவைகளை சீரமிப்போம் கதவுகள் சரியாக பூட்டவில்லை அதில் பிரச்சினை என்றால் சரி செய்து கொடுப்போம் என்றனர்.
சீரமைப்பு பணிக்கான மேற்பார்வையாளர் ராஜன் என்பவரிடம் கேட்டபோது சிற்பங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை நடைபாதை மட்டுமே சரிசெய்யப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட நடைப்பாதையில் மேடும் பள்ளமும் இருந்து கோவிலுக்கு வரும் மக்களுக்கு நடக்கையில் சிரமம் ஏற்படுகிறது. நடைப்பாதை சரிசெய்யப்பட்டு சீராக்கப்படும் என்றார்.
கோவில் முழுவதும் சுற்றிப் பார்க்கையில் தளத்தில் குறிப்பிட்ட அளவிற்கே செங்கற்களை பெயர்த்து உள்ளனர். மீண்டும் அந்த உயரத்திற்கே தளம் அமைக்க வாய்ப்புள்ளது. அவற்றை குவித்து வைத்த புகைப்படமே பலரையும் தவறாக நினைக்க வைத்துள்ளது. எனினும், கோவிலில் உள்ள கல்வெட்டு மற்றும் சிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெளிவாக பார்க்க முடிகிறது. அங்குள்ள பணியாளர்கள் மிகவும் கவனமாகவே பணிகளை மேற்கொள்கின்றனர்.
தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய இராசராச சோழன் மற்றும் அவரது பட்டத்தரசியின் 2 அடி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் மீட்கப்பட்டதால் மக்கள் அச்சம் கொள்வது சரியே..!
கோவில் திருப்பணியாகவே இருந்தாலும் தமிழர்களின் வரலாற்று சின்னத்திற்கு எவ்வித பாதிப்பும் நேராதிருக்க சில சமயத்தில் கேள்வி எழுப்புவது சரியானதே..! எனினும், தஞ்சைப் பெரிய கோவிலில் நாம் அச்சம் கொள்ளும் அளவிற்கும் எந்தவொரு சிற்பங்களும் சேதப்படுத்தப்படவில்லை இந்த பணிகள் கோவிலை பாதுகாக்கவே என உணர வேண்டும் .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.