“ தமிழ்நாடு ” என்ற எழுத்துக்கள் வடிவில் கட்டிடங்களை கட்டிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.

பரவிய செய்தி
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள் “ தமிழ்நாடு ” என்ற எழுத்துக்கள் வடிவில் உள்ளன.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழ் மொழி சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “ ழ் “ வடிவ கட்டிடமே முதன் முதலில் கட்டப்பட்டன. பின்னர் தொடர்ச்சியாக த, மி, நா, டு போன்ற வடிவத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டன
விளக்கம்
தமிழ் மொழியின் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் தஞ்சை முதன்மையானது. உலகிலேயே முதன் முதலில் தமிழுக்கு என்று ஓர் பல்கலைக்கழகம் நிறுவியது இங்கு தான்.
தமிழ் மொழியை உலகறியச் செய்யவும், தமிழ் மொழி சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும் 1000 ஏக்கர் பரப்பரவில் இப்பல்கலைக்கழகம் கட்டப்பட்டன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981 செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று திறக்கப்பட்டன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொடக்கநிலையிலேயே பல்கலைக்கழக வளாகத்தில் த, மி, ழ், நா, டு என்ற எழுத்துக்கள் வடிவில் கட்டிடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, முதலில் “ ழ் ” வடிவ கட்டிடம் கட்டப்பட்டு, தற்போது மொழிப்புலமாக இயங்கி வருகிறது. புகைப்படங்களில் ழ் வடிவ கட்டிடம் சிறிது பழமையானதாகக் காட்சியளிக்கும்.
அதன் பின்னர் 2013-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்திற்கு இடதுபுறத்தில் “ மி “ வடிவ கட்டிடம் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து த, நா, டு போன்ற எழுத்து வடிவங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “ தமிழ்நாடு” என்ற எழுத்துக்கள் வடிவில் முழுமையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களின் படங்கள் தொகுப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில், சிற்பத்துறை, ஓலைச்சுவடித்துறை, கட்டிடக் கலைத்துறை, சித்த மருத்துவத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, மெய்யியல் துறை, தொல் அறிவியல் துறை, நாடகத்துறை, அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை, இந்திய மொழிகள் பள்ளி, இசைத்துறை, அரிய கையெழுத்து சுவடித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன.
வானில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கட்டிடங்களின் புகைப்படங்கள் தமிழ்நாடு என்ற எழுத்துக்கள் வடிவில் காட்சியளிப்பதைக் கண்டு மக்கள் பெருமைக் கொள்கின்றனர்.