கர்நாடகாவில் இலவச பேருந்தில் பயணிக்க ஜன்னல் வழியாக ஏற முயன்று கையை இழந்த பெண் என பாஜகவினர் பரப்பும் பொய் !

பரவிய செய்தி
கர்நாடக மாநிலம் ஹுல்லேனஹள்ளியில் பேருந்தின் ஜன்னல் வழி ஏறிய பெண்ணின் கை துண்டானது. இலவச பேருந்து பயணத்தின் விலை தான் உங்கள் கை.. Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகாவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு கடந்த ஜூன் 11 அன்று சக்தி திட்டம் எனப்படும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் அரசு நடத்தும் சாதாரண பேருந்துகளில் பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகளும் கட்டணமின்றி பயணிக்க முடியும். எனவே இதற்கான சக்தி ஸ்மார்ட் கார்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பெண்களுக்கு விநியோகிக்கபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் “கர்நாடக மாநிலம் ஹுல்லேனஹள்ளியில் இலவச பேருந்தில் பயணம் செய்வதற்காக பேருந்தின் ஜன்னல் வழியாக ஏறிய பெண்ணின் கை துண்டானது. இலவச பேருந்து பயணத்தின் விலை தான் இது” என்று கூறி பெண் ஒருவர் விபத்து நடந்த பேருந்தின் கீழே கை துண்டாக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
In Hulinahalli Karnataka, a woman’s arm was cut off while she was climbing the bus from the window.
The price of free bus travel is your arm 😢 pic.twitter.com/WgKtWZ7PBO— Gowher Ali (@gowherAly) June 25, 2023
यह तस्वीर आपको विचलित कर सकती है
कर्नाटक में चलती बस में दबंगों ने महिला का हात काटा @RahulGandhi जी जवाब दो! pic.twitter.com/wYHudPckGe
— WASIM R KHAN (@wasimkhan0730) June 25, 2023
இதேபோன்று கார்நாடகாவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணின் கையை குண்டர்கள் சிலர் வெட்டியதாகவும் கூறி இந்த வீடியோவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
கர்நாடகா பேருந்து சம்பவம் குறித்து தேடிப் பார்க்கையில், இந்த வீடியோ குறித்து KSRTC தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் 25 அன்று பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.
அதில் “மாண்டியா மாவட்டம் ஹுல்லேனஹள்ளி அருகே ஜன்னல் வழியாக பஸ்சில் ஏறும் போது நடந்த சம்பவம் என்று கூறி, சமூக ஊடகங்களில் தவறாக சித்தரித்து பரப்பப்பட்ட விபத்து குறித்த வீடியோவின் தெளிவான விளக்கம் இவை” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளது.
ಸಾಮಾಜಿಕ ಜಾಲತಾಣಗಳಲ್ಲಿ ಮಂಡ್ಯ ಜಿಲ್ಲೆಯ ಹುಲ್ಲೇನಹಳ್ಳಿ ಬಳಿ ಬಸ್ ನಲ್ಲಿ ಕಿಟಕಿ ಮೂಲಕ ಹತ್ತುವಾಗ ನಡೆದಿರುವ ಘಟನೆ ಎಂದು ಬಿಂಬಿಸಿ ಅಪಘಾತದ ವಿಡಿಯೋವನ್ನು ತಪ್ಪಾಗಿ ತೋರಿಸುತ್ತಿರುವ ಬಗ್ಗೆ ಸ್ಪಷ್ಟೀಕರಣ. pic.twitter.com/cFBdTPK8K0
— KSRTC (@KSRTC_Journeys) June 25, 2023
KSRTC பதிவு செய்துள்ள அறிக்கை குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அது விபத்து குறித்து காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தாக்கல் அறிக்கையின் (FIR எண் 105/2023) புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.
அதில் “ஜூன் 18, 2023 அன்று காலை, பேருந்து (பேருந்து எண் KA-10-F-0151) ஒன்று நஞ்சன்கூடில் இருந்து டி.நரசிபுராவுக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, TN-77-Q-8735 என்ற எண் கொண்ட லாரி ஒன்று பேருந்தின் வலது பின்புற கண்ணாடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜன்னல் அருகே இருக்கைகளில் அமர்ந்திருந்த பெண் பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் 33 வயதான சாந்த குமாரியின் வலது கை துண்டானது மேலும் 50 வயதான ராஜம்மாவின் வலது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு நஞ்சன்கூடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாரி டிரைவர் மீது கர்நாடக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் கூறப்படுவது போல், இது ஜன்னல் வழியாக பேருந்தில் ஏறும் போது ஏற்பட்ட சம்பவம் அல்ல என்று கூறி, இதற்கு KSRTC திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கர்நாடகாவில் மின்கட்டணம் செலுத்த மாட்டேன் என ஊழியரைத் தாக்கியதாகப் பரவும் தவறான வீடியோ !
மேலும் படிக்க: கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !
முடிவு:
நம் தேடலில், கர்நாடகாவில் இலவச பேருந்து ஒன்றில் பயணம் செய்வதற்காக பேருந்தின் ஜன்னல் வழியாக ஏறிய பெண்ணின் கை துண்டானது என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், அப்பெண் சென்ற பேருந்தின் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே அவரது கை துண்டாகியுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.