பிரேசிலில் நடந்த வாகன திருட்டின் வீடியோவை தமிழ்நாடு எனப் பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
இரவில் பயணம் செய்ய விரும்புபவர்கள் கவனமாக இருங்கள்! மிகவும் இரக்கமின்றி வாழுகின்ற ! கொலைகார கும்பல் வாழ்கிறார்கள்! விடியல் ஆட்சி..
மதிப்பீடு
விளக்கம்
சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் இரண்டு பேரில் ஒருவர் திடீர் என எதிரே பைக்கில் வரும் பெண்ணை கீழே தள்ளி விடுகிறார். அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததும், வாகனத்தைத் திருடிக்கொண்டு செல்லும் 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இரவில் பயணம் செய்ய விரும்புபவர்கள் கவனமாக இருங்கள் ! மிகவும் இரக்கமின்றி வாழுகின்ற ! கொலைகார கும்பல் வாழ்கிறார்கள்!! 😱😱 pic.twitter.com/mffgO9paYn
— வீரா_M.A🔆🌿/ VEERA_M.A🔆🌿 (@star1_blak) December 1, 2022
இச்சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்று பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். சிலர் விழிபுணர்விற்காக எங்கு நிகழ்ந்தது என்பதைக் குறிப்பிடாமலும் பதிவிடுகின்றனர்.
உண்மை என்ன ?
அந்த வீடியோவை ஸ்கிரீன்ஷார்ட் எடுத்து இணையத்தில் தேடினோம். 2022, ஆகஸ்ட் 22ம் தேதி Mmaranhao என்ற இணையதளத்தில் இது தொடர்பாகச் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்தோம்.
அச்செய்தியின்படி, 2022, ஆகஸ்ட் 20ம் தேதி பிரேசில் நாட்டில் Maranhão நகரிலுள்ள Nova Imperatriz என்ற பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அடிபட்ட அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அப்பெண் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். மேலும், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த செய்தியில் பதிவிட்டுள்ள வீடியோ 36 வினாடிகள் கொண்டுள்ளது. அந்த சிசிடிவி வீடியோவின் வலதுபுற மேல் ஓரத்தில் 20/08/2022 எனத் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து Tv Jornal MN என்ற யூடியூப் பக்கத்தில் 2022, ஆகஸ்ட் 26ம் தேதி வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் “robbery in Maranhão” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல்களின்படி இது பிரேசில் நாட்டில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், இரவில் பயணம் செய்ய விரும்புபவர்கள் கவனமாக இருங்கள் என சமூக வலைத்தளங்களில் பரவும் வாகன திருட்டு குறித்த வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது பிரேசில் நாட்டில் 2022 ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.