This article is from Mar 11, 2018

தேனியில் சத்தமில்லாமல் நியூட்ரினோ ஆய்வகப் பணிகள் நடைபெறுகிறதா ?

பரவிய செய்தி

தேனி மாவட்டம் தேவராம் அருகில் பொட்டிப் புரம் அம்ரப்பர் மலைப்பகுதியில் சத்தமில்லாமல் நடக்கும் நியூட்ரினோ ஆய்வு மையம்.

மதிப்பீடு

சுருக்கம்

கேரளாவின் திருச்சூர் மற்றும் பாலக்காடு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை 544-யில் குதிரன் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இரு வழி சுரங்கப்பாதையே இவை.

விளக்கம்

தேனியின் பொட்டிப் புரம் அம்ரப்பர் மலையடிவாரத்தில் நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க உள்ளது மத்திய அரசு.  இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஆய்வகத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால், தேனியில் மலைப்பகுதியில் சத்தமில்லாமல் நியூட்ரினோ ஆய்வு திட்டம் நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால், தேனி நியூட்ரினோ ஆய்வு குறித்து பரவி வரும் இப்படங்கள் தவறானவையே..!

கேரளா மாநிலத்தின் திருச்சூர் மற்றும் பாலக்காடு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை 544-வின் குதிரன் என்ற மலைப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, குதிரன் மலையில் இரு சுரங்கப்பாதை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2012-ல் இறுதி பணிகளை முடிக்க திட்டமிட்டனர். ஆனால், 6  புறவழி அமைக்கும் பணிகளில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தடையினால் தாமதமாகியது.

இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுவதன் மூலம் கொச்சி மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பயண நேரம் குறைய உள்ளது. குதிரன் சுரங்கம் திறக்கப்பட்ட பிறகு கொச்சி மற்றும் கோயம்புத்தூர் இடையே உள்ள தொலைவை வாகனங்களால் 3 மணி நேரத்தில் அடைய இயலும்.

மும்பையை சேர்ந்த பரகதி மற்றும் ரயில் ப்ராஜெக்ட் ஆகியோர் 200 கோடி மதிப்பில் இந்த காண்ட்ராக்டை எடுத்துள்ளனர். குதிரன் மலைப்பகுதியின்  1 கி.மீ தொலைவுள்ள இடதுபுற சுரங்கப்பாதையின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தன மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. வலதுபுற சுரங்கப்பாதையின் பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இரு சுரங்கங்களுக்கு இடையே 20 மீட்டர் இடைவெளியும், இரண்டு சுரங்கமும் 13 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டது. குதிரன் சுரங்கப்பாதையானது பாதுகாப்பு மற்றும் மென்மையான பயணத்தை அளிக்க அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் உள்ளே நுழையும் தருணத்தில் ஒளி, காற்று அசைவு, வெப்பம் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிக்கும் வகையில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குதிரன் சுரங்கத்தின் பணிகள் முடிவடைந்த பின் இந்தியாவின் மிக நீண்ட இரு குழாய் சாலை அமைக்கபட்ட சுரங்கம் என்ற பெருமையை அடையும். மேலும், இதன் பணிகள் முடிவடைந்து போக்குவரத்திற்கு தயாராகும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்க எண்ணியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், வனத்துறை, புவியியல் துறை, தீயணைப்பு துறை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு குறித்த அனுமதி வழங்கிய பிறகு சுரங்கம் பயன்பாட்டிற்கு வரும் என்று பிரகதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அமைக்கப்பட்டு வரும் குதிரன் சுரங்கப்பாதையை தேனி நியூட்ரினோ ஆய்வக பணிகள் என்று தவறாக புரிந்து வதந்தியை பரப்பி வருகின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் :

அண்டவியல் ஆய்வாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நியூட்ரினோ குறித்த ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று ஒரு தவறான செய்திகளும் இணையத்தில் பரவி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர், அண்டவியல் ஆய்வாளர், நூலாசிரியரான ஸ்டீபன் ஹாக்கிங், குறைவில்லாத ஆற்றலை வழங்க ஆதாரமாக நியூட்ரினோ இருக்கும். தற்போது நாம் சந்தித்து வரும் உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் மூலமாக நியூட்ரினோவால் மட்டுமே இருக்க முடியும். அதை சரியாக புரிந்து கொண்டால் சில காலங்களில் நம்மால் இலக்கை அடைய இயலும் என்று கூறியுள்ளார்.

நியூட்ரினோக்கள் குறித்து பல்வேறு குழப்பங்களும், தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அதை பற்றிய வதந்திகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதை அறிய வேண்டும்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader