கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பதிவு.

பரவிய செய்தி
அரிய புகைப்படம்.. மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி அவர்களை வரவேற்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்..
மதிப்பீடு
விளக்கம்
அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குருஜி என அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவரான கோல்வால்கர் மதுரைக்கு வருகை தந்த பொழுது அவரை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்பதாக ஓர் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
H.RAJA facebook post archived link
” தேவர் பெருமானாரின் குருபூஜை இன்று, தேசபக்தியால் உந்தப்பட்டு நாட்டின் விடுதலைக்காக நேதாஜி அவர்களுடன் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போராடினார். தேசியம் , தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாகக் கொண்டு நாட்டிற்காக வாழ்ந்த தேவர் அவர்களுக்கு நமது அஞ்சலி ” என மேற்காணும் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு இருந்தார். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
ஹெச்.ராஜா மட்டுமின்றி பாஜக கட்சி மற்றும் ஆதரவாளர்கள் பலரும் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் கோல்வால்கர் இணைந்து இருப்பதாக ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டே வருகின்றனர்.
When tall Tamil Leaders like Kamaraj campaigned strongly against RW Orgs like RSS, Muthuramalinga Thevar gave stage for Guruji Golwalkar to speak to the masses of Tamil Nadu. Thevar Aiya’s Birth Anniversary today.
Pic: Thevar Aiya taking Golwalkar around Meenakshi Amman Temple. pic.twitter.com/cJuTRQUPwA
— SG Suryah (@SuryahSG) October 30, 2018
SG Suryah twitter post archived link
கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தமிழக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் மற்றும் இளைஞர் அமைப்பின் துணைத் தலைவரான எஸ்.ஜி.சூர்யா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தமிழ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பொழுது, தமிழ்நாட்டில் கோல்வால்கருக்கு மேடை அளித்தவர் முத்துராமலிங்கத் தேவர். கோல்வால்கரை மீனாட்சி அம்மன் கோவிலில் அழைத்து செல்லும் முத்துராமலிங்கத் தேவர் ” என ஒரு புகைப்படத்தையும் இணைத்து இருந்தார்.
நீண்டகாலமாகவே பாஜகவினரால் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் குருஜி கோல்வால்கர் சந்திப்பு குறித்து பதிவிட்டு வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இது உண்மையா என்பது குறித்த சந்தேகங்கள் அதிகம் இருந்தன.
குறிப்பாக, ஹெச்.ராஜா பதிவிட்ட புகைப்படத்தில் கோல்வால்கரை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. அதில், கையெடுத்து வணங்குவது போன்று அமைந்து இருக்கிறது. ஆனால், தேவர் இறைவனைத் தவிர்த்து மற்றவர்களை வணங்குவதில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். ஆகையால், இதனை பலரும் மறுக்கின்றனர்.
அடுத்ததாக, 2017 பிப்ரவரியில் தேவர் மலர் என்ற இதழில் , ” தேவரவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை சந்திக்கவே இல்லை ” எனும் கட்டுரையை வெளியிட்டு உள்ளனர். அதில், 1956-ல் மதுரையில் நடந்ததாகக் கூறும் கோல்வால்கர் விழாவில் மீசையுடன் வணங்குபவரை தேவர் எனக் கூறுகிறார்கள். 1955-ல் தேவரின் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தில் மீசை இல்லாமல் இருப்பதை காணலாம் “.
மேலும், தேவரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆராய்ந்து தகவலைகளை திரட்டி வைத்து இருக்கும் வீ.எஸ்.நவமணி என்பவர், ” மதுரை திலகர் திடலில் 1956-ல் நடந்ததாக சொல்லப்படுகின்ற கோல்வால்கர் பிறந்தநாள் விழாவில் பசும்பொன் தேவர் கலந்து கொள்ளவில்லை. இதுபோன்ற தேவரைப் பற்றிய பொய்யான கருத்துக்களை புறம் தள்ள வேண்டும் ” என கூறிய தகவல் தேவர் மலர் இதழில் வெளியாகி இருக்கிறது.
RSS Facebook post archived link
1956-ல் கோல்வால்கர் மதுரை நகருக்கு வருகை தந்ததாக விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. எனினும், 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் கோல்வால்கர் பேசிய கருத்தை ஆர்.எஸ்.எஸ் உடைய அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆக, 1949-ல் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கலாம் என நினைக்க தோன்றும். ஆனால், 1949-ல் முத்துராமலிங்கத் தேவர் தலைமறைவாகி, ஒன்றரை ஆண்டுகள் கழித்து 1951-ல் நாடு திரும்பியதாக தேவர் மலர் இதழில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 1949-ல் கொல்கத்தா சென்ற முத்துராமலிங்கத் தேவர் அங்கிருந்து சீனா சென்றதாக தேவர் வாழ்க்கை வரலாறு குறித்த மேற்காணும் வீடியோவில்(13வது நிமிடத்தில்) கூறப்படுகிறது. ஆக, கோல்வால்கர் 1949 டிசம்பரில் மதுரை வந்ததாக கூறப்படும் சமயத்தில் தேவர் நாட்டிலேயே இல்லை என்ற முரண்பாடுகள் இருக்கிறது.
பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட ட்விட்டர் பதிவில், முக்கிய தலைவராக இருந்த முத்துராமலிங்கத் தேவர், கோல்வால்கர் அருகே அதிகம் முக்கியத்துவம் இல்லாதவராக இருப்பதும் சந்தேகத்தின் அடையாளமே. மேலும், இந்த புகைப்படம் ஓர் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஒருவேளை, முத்துராமலிங்கத் தேவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு ஆதரவாக இருந்து இருந்தால் அதனை தற்பொழுது உள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்களா என்ன ?
ஹெச்.ராஜா பதிவிட்ட புகைப்படத்திற்கு, தேவர் மீசை உடன் இருக்கும் புகைப்படத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை காணலாம். 1952-களில் இருந்தே தேவர் மீசை இல்லாமல், நீளமான தலைமுடியுடன் இருக்கும் தோற்றத்தில் தான் இருந்து உள்ளார். 1952-ல் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் வெற்றி விழா மற்றும் 1955-ல் இரண்டாம் முறையாக பர்மா சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் அவரின் தோற்றத்தை காணலாம்.
முத்துராமலிங்கத் தேவர் பர்மா சென்ற பொழுது எடுக்கப்பட்ட பழைய வீடியோ காட்சிகளில் (3-வது நிமிடத்தில்) மீசை இல்லாமல் இருக்கும் தோற்றம் தெளிவாக பதிவாகி இருக்கிறது.
முடிவு :
நம்முடைய ஆய்வில் இருந்து, மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை வரவேற்பவர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் அழைத்து செல்வதாகவும் கூறும் நபர் முத்துராமலிங்கத் தேவர் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன.
1956-ல் கோல்வால்கர் மதுரைக்கு வருகை தந்து இருந்தால் அப்பொழுது முத்துராமலிங்கத் தேவரின் தோற்றம் அவ்வாறு இருக்கவில்லை. மீசை இல்லாமல், நீளமான தலைமுடியைக் கொண்ட தோற்றத்தில் இருந்து இருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் தேவரின் தோற்றம் குறித்த பல்வேறு புகைப்படங்கள் மற்றும் பர்மா சென்ற வீடியோ காட்சிகள் நமக்கு கிடைத்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ் முகநூல் பதிவில் கூறுவது போன்று 1949-ல் கோல்வால்கர் மதுரை வந்திருந்தால் முத்துராமலிங்கத் தேவருடன் சந்திப்பு நிகழ்ந்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அப்பொழுது அவர் தலைமறைவாகி இருந்தார்.
கடந்த காலத்தில் நிகழ்ந்ததாக கூறும் ஆதாரமில்லாத சம்பவத்தை வைத்து அரசியல் சார்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதனால் தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
UPDATE :
முத்துராமலிங்கத் தேவர் மற்றும் கோல்வால்கர் இருவரும் சந்தித்ததாக பகிரப்படும் புகைப்படங்கள் இரண்டும் தவறானதே. அது குறித்த ஆதாரங்கள் பலவற்றை மேலே காண்பித்து இருக்கிறோம்.
அடுத்ததாக, எஸ்ஜி சூர்யா வெளியிட்ட பதிவில் தியாகபூமியில் வெளியானதாக ஒரு செய்திப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் தியாகபூமி என எந்தவொரு வார்த்தையும் இல்லை. ஒரு செய்தியின் பக்கத்தை மட்டுமே பதிவிட்டு இருக்கிறார். அது தியாகபூமியை சேர்ந்ததா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
1956-ல் தியாகபூமி என்ற பத்திரிகை இருந்தது தொடர்பாக தேடிய பொழுது ” ரோஜா முத்தையா ” என்ற நூலகத்தில் அதன் இரண்டு பிரதிகள் கிடைத்துள்ளன. அவர்கள் கூறும் குறிப்பிட்ட அந்த தேதியில் இருக்கும் பத்திரிகை எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை. அதனை நாங்கள் தேடிக் கொண்டு இருக்கிறோம். சரியான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து கட்டுரையை வெளியிடுவோம்.