திமுக ஆட்சியில் திருக்கண்ணபுரம் கோவிலில் கிருஸ்தவ தேவதை ஓவியம் வரைந்துள்ளதாக அர்ஜுன் சம்பத், தினமலர் பரப்பிய பொய் !

பரவிய செய்தி
108 திவ்யதேசங்களில் ஒன்று பழம்பெருமை வாய்ந்த திருக்கண்ணபுரம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கிருத்துவ தேவதைகளை ஓவியமாக தீட்டி உள்ளனர். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்!X post link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கிருஸ்தவ தேவதைகளை ஓவியமாக தீட்டி உள்ளனர் எனக் கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் எக்ஸ் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து, தினமலர் செய்திக்கு அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டியில், ” திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை, அலங்கோலத் துறையாக மாறி விட்டது என்பதற்கு சமீபத்திய உதாரணம், கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாகக் குறிப்பிடப்படும் திருக்கண்ணபுரம் கோவிலில் தற்போது புனரமைப்பு பணிகள் நடக்கிறது. அதையொட்டி, கோவில் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் புதுப்பிக்கின்றனர். இந்து கோவில் அடையாளங்கள் குறித்து எதுவுமே தெரியாத ஓவியர், கிருஸ்தவ ஏஞ்சல் ஓவியங்களை அங்கு வரைந்து இருக்கிறார். திருக்கண்ணபுரம் கோவில் மேற்கூரை ஓவியம் கிருஸ்தவ தேவதையைப் போல் இருப்பதால் அதை உடனடியாக சீர்படுத்த வேண்டும் ” எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
உண்மை என்ன ?
அர்ஜுன் சம்பத் மற்றும் தினமலர் செய்தியில் இடம்பெற்றுள்ள கோவில் ஓவியத்தின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி The Sunday Guardian எனும் இணையதள பக்கத்தில் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் புனரமைப்பு பனியின் போது கிருஸ்தவ தேவதைகளின் ஓவியத்தை வரைந்து உள்ளதாகக் கூறி அதே புகைப்படம் பதிவாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
வைரலான ஓவியம் குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் தேடுகையில், திருக்கண்ணபுரம் அருள்மிகு சௌரி ராஜப்பெருமாள் கோவிலின் முப்பரிமாண காட்சி கிடைத்தது. அதில், ஸ்ரீ செளரி ராஜப்பெருமாள் சன்னதி பகுதியின் மேற்கூரையில் இந்த ஓவியம் இடம்பெற்று உள்ளதை பார்க்க முடிந்தது.
மேலும், திருக்கண்ணபுரம் கோவில் ஓவியம் குறித்து அக்கோவிலின் செயல் அலுவலர் அளித்த மறுப்பு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையின் நாகப்பட்டினம் இணை ஆணையர் குமரேசன் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையருக்கு நவம்பர் 9ம் தேதி அனுப்பிய கடிதம் நமக்கு கிடைத்தது.
இணை ஆணையரின் கடிதத்தில், ” 09.11.2023 தினமலர் நாளிதழில் ஹிந்து கோவில் ஓவியத்தில் கிருஸ்தவ தேவதையா என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு செயல் அலுவலரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், இச்செய்தி ஏற்கனவே 13.07.2017 அன்று பத்திரிக்கைகளில் வெளிவந்து திருக்கோயில் சார்பில் மறுப்பு தெரிவித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது எனவும், திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள ஓவியம் கந்தர்வ கன்னிகள் எனவும், இந்த ஓவியம் 1963ம் ஆண்டு நடைபெற்ற மகா சம்ரோஷணத்திற்கு முன்பே வரையப்பட்டது எனவும், அதன் பின்னர் 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இத்திருக்கோயிலுக்கு மகா சம்ரோஷணம் நடைபெற்ற போது இந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டது எனவும் செயல் அலுவலரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கோயிலில் வரையப்பட்ட கந்தர்வக் கன்னியின் ஓவியத்தை தற்போது கிருஸ்தவ தேவை என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது தவறானது எனவும், இதே போன்று கந்தர்வக் கன்னிகளின் மரச்சிற்பங்கள் திருக்கோயிலின் பள்ளியறையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது எனவும், இத்திருக்கோயிலின் தெப்ப உற்சவத்தின் போது தெப்பத்தின் நான்கு புறமும் இதுபோன்ற கந்தர்வக் கன்னிகளின் சிற்பங்கள் பொருத்தப்படுவது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது எனவும் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டு, இந்த ஓவியம் தற்போது வரையப்பட்டது அல்ல ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலின் பிரமோத்ஸவம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து வெளியான தினமணி செய்தியில், 2005ம் ஆண்டு அக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றதாகவும், 12 ஆண்டுகளுக்கு பிறகு 2017ல் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் செளரி பெருமாள் கோவிலில் கிருஸ்தவ தேவதைகளின் ஓவியங்களை வரைந்துள்ளதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானது.
திருக்கண்ணபுரம் கோவிலில் உள்ள அந்த ஓவியம் கந்தர்வ கன்னிகளின் ஓவியம் என்றும், 1963ம் ஆண்டிற்கு முன்பிருந்தே அந்த ஓவியம் இருந்து வருவதாகவும், 1992 மற்றும் 2005ம் ஆண்டுகளில் நடைபெற்ற திருப்பணியின் போது ஓவியம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.