திருமலா தயிரில் திடீரென ஹலால் முத்திரை எனத் தவறாகப் பரப்பப்படும் ஏற்றுமதி செய்யும் தயாரிப்பின் படம் !

பரவிய செய்தி
சென்னை மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு திரு.B.பிரம்ம நாயுடு என்பவரால் திருமலாபால் 1996ம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பால் தயாரிப்பு பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது திடீரென தயிர் டப்பாவில் ‘ஹலால்’ முத்திரை இட வேண்டிய அவசியம் என்ன?
மதிப்பீடு
விளக்கம்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனமான திருமலாவின் தயிர் பாக்கெட்களில் திடீரென ‘ஹலால்’ என்று முத்திரையிட்டு விற்பனை செய்வதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த படத்திலுள்ள தயிர் பாக்கெட் மூடியின் மீது ‘HALAL’ என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
Thirumala Curd, Milk, Yogurt is now Halal.
Soon, Thurumala Prasadam- Laddoos will be Halal certified.
You can abuse me, but it is happening and we Hindus are letting it happen. If not Stop buying such Halal-marked products immediately. pic.twitter.com/t4ATikQoKm
— Nobert Elekes (@N0rbertElekes) March 23, 2023
Yogurt is now marked as “Halal” …boycott these products pic.twitter.com/Qk7bKwimSm
— No Conversion (@noconversion) May 23, 2023
உண்மை என்ன ?
பரப்பப்படும் செய்தி குறித்த கீவேர்ட்ஸ் கொண்டு இணையத்தில் தேடிய போது, திருமலா பால் பொருட்கள் பல இந்திய விற்பனை இணையதளங்களில் விற்பனை செய்யப்படுவதைக் காண முடிந்தது. ஆனால், அவற்றில் ஹலால் சான்றளிக்கப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாமார்ட் அவர்களது இணையதளத்தில் ‘Yogurt’ என்பதற்குப் பதிலாக திருமலா தயிர் (Curd) என்றே குறிப்பிட்டுள்ளது (சில நாடுகள் Curd என்றும், வேறு சில நாடுகள் Yogurt என்றும் பயன்படுத்துகிறது). அதில் ‘thick and tasty’ என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஹலால் சான்றிதழ் பற்றி எந்த குறிப்பும் இல்லை. மேலும் இணையத்தில் உள்ள அனைத்து திருமலா நிறுவனம் தயாரித்த தயிர்களையும் ஆராய்ந்ததில், அவற்றிற்கு ஹலால் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என்பதைக் காண முடிகிறது.
Instacart, karouncheese, New Indian Supermarket மற்றும் பிற இணையதளங்களில் திருமலா Dahi Yogurt என்ற தயாரிப்பு விற்கப்படுகிறது. இந்த இணையதளங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு வெளியில் இயங்கக்கூடியவை. அதில் விற்கப்படும் பொருட்களின் விலை டாலரிலும், இந்தியா மார்ட் போன்ற தளத்தில் ரூபாயிலும் உள்ளது. Instacart விற்பனை தளத்தில் திருமலா நிறுவனத்தின் Dahi Yogurt ஹலால் சான்றிதழுடன் பதிவிடப்பட்டுள்ளது. பிற வலைத்தளங்களில் சான்றிதழ் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள திருமலா பால் பொருட்கள் விற்பனை பிரிவு உதவி மேலாளர் லக்ஷ்மன் ராவ் என்பவரை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகையில், “ஹலால் முத்திரை உள்ள எங்களது பால் பொருட்கள் தென்னிந்தியாவில் விற்கப்படுவதில்லை. பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் மட்டுமே அவ்வாறு இருக்கும். அதுவும் அவர்களது கோரிக்கைக்கு ஏற்பவே அவ்வாறு சான்றிதழ் அளிக்கப்படும்” எனக் கூறினார்.
இவற்றிலிருந்து வைரல் செய்யப்படும் படத்தில் இருப்பது திருமலா பால் நிறுவனத்தின் பொருள்தான். ஆனால், அது வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களில், அந்நாட்டினரின் கோரிக்கைக்கு ஏற்ப ஹலால் எனக் குறிப்பிடப்படுகிறது. அவை இந்தியாவில் விற்கப்படுவதில்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
இதற்கு முன்னர் ஆவின் பால் பொருட்களில் ஹலால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைக் குறிப்பிட்டு யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், திருமலா தயிர் பாக்கெட் மீது ஹலால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம், அந்நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்பு என்பதும், இந்தியாவில் ஹலால் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுவதில்லை என்பதும் அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் அளித்த விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.