Fact Check

எம்.பி திருமாவளவனின் முழு பேச்சை மறைத்து வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் தவறாகப் பரப்பும் கதிர் நியூஸ்

பரவிய செய்தி

பா.ஜ.க’வுடன் கூட்டணி வைக்க தயங்காது வி.சி.க – தி.மு.க’வை மிரட்டும் திருமாவளவன்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

“திமுகவை மிரட்டும் திருமாவளவன்” எனத் தலைப்பில் பாஜகவினரால் நடத்தப்படும் கதிர் சமூக வலைதள பக்கங்களில், நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், ” விடுதலை சிறுத்தைகள் கட்சி பிஜேபியோடும், சங் பரிவார்களோடும் கைகோர்க்க ஒரு போதும் தயங்காது ” எனக் கூறியதாக 18 நொடிகள் கொண்ட வீடியோவை பதிவிடப்பட்டு இருக்கிறது.

Advertisement

உண்மை என்ன ? 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விசிக மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைப் பற்றி பேசுகையில், ” சிவன், மகா விஷ்ணு, குல தெய்வங்களின் மீது நம்பிக்கை உள்ள இந்துக்களையோ நாம் யாரையும் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு எதிரான வெறுப்பை உமிழவில்லை. அந்த மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி தங்களின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வெறுப்பு அரசியலை விதைக்கிற சங் பரிவார்களை தான் நாம் கண்டிக்கிறோம் அல்லது அம்பலப்படுத்துகிறோம் அல்லது அவர்களின் அரசியலை விமர்சிக்கிறோம்.

உடனே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றால், அவர்களை நாம் விமர்சிக்கும் போது பார்த்தீர்களா, பார்த்தீர்களா திருமாவளவன், முத்தரசன் மற்ற தலைவர்கள் மேடையில் இருந்தவர்கள் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறார்கள் எனக் கூறுகின்றனர்.

எல்லோரும் சமம் என சொல்லும் அரசியலமைப்பு சட்டத்தையே தூக்கி எறிய முனைகிற இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். நாம் சங் பரிவாரின் அரசியலை விமர்சிக்கும் போது இந்துக்களுக்கு எதிராக பேசுகிறோம் என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள் ” எனக் கூறி இருக்கிறார்.

வீடியோவின் 40வது நிமிடத்தில் திருமாவளவன் பேசுகையில், ” இந்து மதத்தில் ஏன் பிற மதத்தை சார்ந்தவர்கள் இணையவில்லை. இந்த மதம் ஏன் உலகின் பிற நாடுகளில் நிரம்பி வழியவில்லை. இருக்கிற சாதியிலே நான் தான் உயர்ந்தவன், என்னை தீண்டாதே. எனக்காக எடுபுடி வேலை செய். நீ சூத்திரன், நீ சத்திரியன், நீ வைசியன், பெண்கள் படிக்கக் கூடாது, ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். சாதி கலப்பு கூடாது, வர்ண கலப்பு கூடாது.. இந்த கட்டுப்பாடுகள் தானே இந்த மதம் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு காரணம், பரவாமல் இருப்பதற்கு காரணம். சகோதரத்துவம் இல்லாதது தானே அதற்கு காரணம்.

சமத்துவம் என்ற அரசியலில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது தானே காரணம். சங் பரிவார்கள் சமத்துவத்தை பேசட்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிஜேபியோடும், சங் பரிவார்களோடும் கைகோர்க்க ஒரு போதும் தயங்காது. அரசியல் தான் முரண்பாடு, கொள்கை தான் முரண்பாடு” எனப் பேசி இருக்கிறார்.

இதையடுத்து, ” கொள்கையை மாற்றினால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுடன் கைகோர்க்க தயார் ” என திருமாவளவன் பரபரப்பு பேச்சு என செய்திகளிலும் வெளியாகியது.

Facebook link | Archive link 

இதற்கு விளக்கம் அளித்த எம்.பி திருமாவளவன், ” கொள்கையை மாற்றினால் பாஜக, சங்பரிவார் அமைப்புகளோடு நட்புறவு கொண்டு கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை என்று சொன்னேன்; அதற்கு பொருள் கூட்டணி வைக்க வேட்கையோடு இருக்கிறோம் என்று அர்த்தம் அல்ல ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், சங் பரிவார்கள் சமத்துவத்தை பேசட்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிஜேபியோடும், சங் பரிவார்களோடும் கைகோர்க்க ஒரு போதும் தயங்காது என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்து எம்.பி திருமாவளவன் பேசி இருந்தார்.

ஆனால், அவரின் உரையின் இறுதியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் விசிக கைகோர்க்க தயங்காது எனக் கூறிய பகுதியை மட்டும் எடுத்து திமுகவை மிரட்டும் வகையில் திருமாவளவன் பேசியதாக கதிர் இணையதளம் தவறாக பரப்பி வருகிறது. 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button