எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாக நிற்க வைத்ததாக வதந்தி பரப்பும் தினமலர் & பாஜகவினர் !

பரவிய செய்தி

திருமாவை ஓரமாக நிற்க வைத்து பெருமையாய் வேட்புமனு தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்த போது உடன் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அமர இருக்கை அளிக்காமல் ஓரமாய் நிற்க வைத்ததாக சமூக வலைதளங்களில் இப்புகைப்படத்தை பாஜகவினர் வைரல் செய்து வருகின்றனர்.

தினமலர் இணையதளத்தில், ” திருமாவை ஓரமாக நிற்க வைத்து பெருமையாய் வேட்புமனு தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள் ” என வெளியான செய்தியும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பின்னால் திருமாவளவன் நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?  

Twitter link 

எம்.பி திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில், ” திரு.யஷ்வந்த் சின்ஹா அவர்கள் சூன்-27 பகல் 12.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்கள் – உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்து கையொப்பமிட்ட வேட்புமனு நாடாளுமன்றத்தின் செக்ரட்டரி ஜெனரலிடம் தாக்கல் செய்யப்பட்டது ” என வேட்புமனு தாக்கலின் போது அவர் இருக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

வேட்புமனுத் தாக்கலை நேரலையாக வெளியிட்ட சன்சாத் டிவி வீடியோவில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ராசா உள்ளிட்டப் பல கட்சிப் பிரதிநிதிகள் பலரும் உள்ளே வந்து அமர்ந்து இருக்க 16வது நிமிடத்தில் உள்ளே வரும் திருமாவளவன் பின் வரிசைக்கு சென்று சிறிது நேரம் நின்று விட்டு பிறகு அமர்ந்து இருப்பதை காணலாம். பின்னர் 18:30 நிமிடத்தில் மனுதாக்கல் செய்ய போகும் நேரத்தில் திருமாவளவன் எழுந்து நிற்கிறார். மனுதாக்கல் செய்த பிறகு இருக்கையில் அமர்ந்து இருப்பதை 23வது நிமிடத்தில் தெளிவாய் பார்க்கலாம்.

இதுமட்டுமின்றி, குடியரசுத்தலைவர் தலைவர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பாக ட்விட்டரில் திருமாவளவன் பதிவிட்டு உள்ளார்.

தினமலர் வெளியிட்ட செய்தியின் உள்ளே, ” வேட்புமனு தாக்கலின் போது திருமாவளவன் அமர நாற்காலி இல்லை. இதனால் அவர் பின்னால் ஓரமாக நின்று கொண்டிருந்தார். ஆனால், புகைப்படத்தில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்தன. பின்னர் வேட்புமனு தாக்கலைப் பார்ப்பதற்கு அல்லது ஏதோ காரணங்களுக்காக எழுந்து கொண்டிருந்தது தெரிகிறது

இருப்பினும், காங்கிரஸ் திமுக கூட்டணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெற வைப்பதில் முழு மூச்சாக இறங்கியிருக்கும் திருமானவளவனுக்கு ஒரு பிளாஸ்டிக் சேர் கூட தரப்படாமல் ஒரு ஓரமாக நிற்க வைத்து பெருமையாய் வேட்புமனு தாக்கல் செய்தனர் எதிர்க்கட்சி தலைவர்கள் ” என வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க : திருமாவளவனுக்கு உடைந்த நாற்காலியைக் கொடுத்தாரா அமைச்சர் ?

முதலில் இருக்கை அளிக்கவில்லை எனச் செய்தியை வெளியிட்டு, பின்னர் அதை மாற்றி இருக்கிறார்கள். ஆனால், கூடுதலாக வரிகளை சேர்த்தாலும் கூட தலைப்பு மற்றும் செய்தியை படிக்கையில் திருமாவளவன் நிற்க வைக்கப்பட்டதாகவே குறிப்பிட்டு உள்ளனர் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

முடிவு : 

நம் தேடலில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கலின் போது எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாக நிற்க வைக்கப்பட்டதாக பரப்பப்படும் தினமலர் செய்தி மற்றும் பாஜகவினரின் பதிவுகள் பொய்யானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader