திருமாவளவன் மீதான பாலியல் குற்றச்சாட்டும், போலி புகைப்படமும் !

பரவிய செய்தி
திருமாவளவன் ஒரு பாலியல் குற்றவாளி என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? ஆம் இவர் அரசு அதிகாரியாக பணியாற்றிய போது உதவி கேட்டு வந்த அந்த ஊர் தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதே அறிந்து அந்த ஊர்மக்கள் திருமாவளவனை புரட்டி எடுத்தனர். அதன் காயங்கள் தான் இன்றளவும் அவர் முகத்தில் உள்ளது. இதை அறிந்து தமிழக அரசு அவரை பதவியில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் தான் அரசியலில் நுழைந்தார் திருமாவளவன்.
மதிப்பீடு
விளக்கம்
சிதம்பரம் தொகுதியின் எம்பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன் கடந்த காலத்தில் அரசு பணியில் இருந்த பொழுது பட்டியலினப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததால் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. பரப்பப்படும் மீம் பதிவில் பெண் ஒருவரின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.
உண்மை என்ன ?
1988-ல் தொல்.திருமாவளவன் தமிழகத்தின் தென்மாவட்ட நகரமான மதுரையில் அரசு தடயவியல் துறையில் அலுவலராக பணியாற்றினர். அதன்பின் அரசியல் ஈடுபாடுகள் அதிகரித்த காரணத்தினால் 1997-ல் அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 1999-ல் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு பணியை ராஜினாமா செய்தார்.
அரசு பணியில் இருந்த பொழுது ஈடுபட்டதாக கூறப்படும் திருமாவளவன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து தேடிய பொழுது அவ்வாறான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. அடுத்ததாக, அவரின் மீதான குற்றச்சாட்டுடன் இணைக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் குறித்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அது பழைய புகைப்படம் அல்ல, கடந்த ஆண்டில் செய்தியில் வெளியான புகைப்படம் என அறிய முடிந்தது.
” கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி ரூபிணி (24) இவர்களுக்கு 3 வயதில் தேவிஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. கணவன் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் ரூபிணிக்கும், சற்குணம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் உல்லாசமாக இருந்த பொழுது இடையூறாக இருந்த குழந்தையை கொன்றதாக 2019 மே மாதம் வெளியான செய்தியில் இடம்பெற்று உள்ளது” .
2019 மே மாதம் ஏசியாநெட் இணையதளத்திலும், 2020 ஜனவரி 2-ம் தேதி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கால் முறிந்ததாக வெளியான தினமலர் செய்தியில் அப்பெண்ணின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. திருமாவளவன் பாலியல் குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கொன்ற தாயின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றி விட்டதாக திருமாவளவன் மீது கோவையைச் சேர்ந்த கவிதா என்ற பெண் புகார் அளித்த செய்தியும் நமக்கு கிடைத்தது. 2013-ல் விகடனின் வெளியான கட்டுரையில், கணவரை விவாகரத்து செய்து விட்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் கவிதா திருமாவளவன் மீதும், கட்சியை சேர்ந்தவர்கள் தன் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கோவை கமிஷனரிடம் புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைக் கட்சியை சேர்ந்தவர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகவும், புகார் உடன் தொடர்புடையவர்கள் அளித்த தகவல்களும் விரிவாக இடம்பெற்று இருக்கிறது. அந்த செய்தியை இங்கே விரிவாக படிக்கவும்.
ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் முகநூல் காவி மீடியா எனும் முகநூல் பக்கத்தில் திருமாவளவனின் கடந்தகால புகைப்படத்தை பதிவிட்டு கிண்டல் செய்து இருந்தார்கள். அதில், பாலியல் குற்றச்சாட்டு ஏதும் இடம்பெறவில்லை.
முடிவு :
நமது தேடலில், திருமாவளவன் தலித் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததால் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கொன்ற தாயின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.