எம்.பி திருமாவளவனின் உண்மையானப் பெயர் “திருமால் வளவனா” ? – ஆதாரத்துடன் விளக்கம் !

பரவிய செய்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரின் பெயர் திருமாவளவன் கிடையாது. திருமால்வளவன் என்ற தனது பெயரை அரசியல் காரணங்களுக்காக திருமாவளவன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

2022 அக்டோபர் 1ம் தேதி சன் செய்தி தொலைக்காட்சியில், “RSS பேரணி vs சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி : அரசியல் ஆதாயம் யாருக்கு?”என்ற தலைப்பில் கேள்விக் களம் என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விவாத நிகழ்ச்சியில் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், வழக்கறிஞர் மணிகண்டன் (அதிமுக) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில், வழக்கறிஞர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  “திருமால்வளவன்” என்ற அவரது பெயரை அரசியலுக்காக “திருமாவளவன்” என மாற்றிக் கொண்டார். இது தொடர்பாக ஆதாரத்தினை வெளியிடத் தயார் என்றும் பேசி இருந்தார்.

உண்மை என்ன ?

சன் செய்தி தொலைக்காட்சியில் வழக்கறிஞர் மணிகண்டன் பேசியது குறித்து அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினோம். எந்த ஆதாரத்தினை கொண்டு எம்.பி திருமாவளவனின் பெயரினை திருமால் வளவன் எனக் குறிப்பிட்டீர்கள் என்று கேட்டோம். 

அவரது சான்றிதழில் திருமால்வளவன் என்றே உள்ளது என்றார். ஒரு தனிநபரின் கல்வி சான்றிதழ் என்பது அவரது தனிப்பட்ட தகவல் அடங்கிய ஆவணம். அதனை பொதுவில் வெளியிடக் கேட்பது முறையல்ல எனக் குறிப்பிட்டோம்.

அதன் பிறகு ஜி.கே.மூப்பனார் தான் அவருக்கு அரசியல் குரு, வழிகாட்டி. அவருடன் நீண்ட காலம்  நெருங்கிய தொடர்பிலிருந்தார். அப்போது அவரது பெயர் திருமால்வளவன் தான் எனக் குறிப்பிட்டார்.

மேலும், அன்றைய ஜூனியர் விகடன், நக்கீரன் என அனைத்து பத்திரிக்கைகளிலுமே அவரது பெயரினை திருமால்வளவன் என்றே எழுதப்பட்டிருக்கும் எனக் கூறினார். அவரது பெயரினை திருமாவளவன் என நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இது முற்றிலும் பொய்யான தகவல். முதலில் இருந்தே அவரின் பெயர் திருமாவளவன் தான் எனக் கூறி 1993 ஆண்டு ஜூலை மாதம் ‘இனி’ பத்திரிகையில் வெளிவந்த திருமாவளவனின் நேர்காணலினை யூடர்னுக்கு அனுப்பி வைத்தார்.

இனி என்னும் பத்திரிக்கை சுப.வீரபாண்டியன் அவர்களால் நடத்தப்பட்டது. “நாங்கள் ஆடுகள் அல்ல, சிறுத்தைகள் – திருமாவளவனுடன் நேர்காணல்” என்ற தலைப்பில் அந்நேர்காணல் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமேதை அம்பேத்கரின் மனைவி சவீதா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட `பாரதீய தலித் பேந்தர்’ என்ற அமைப்பின் தமிழக அமைப்பாளர் மலைச்சாமியுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, 1982-ல் தன்னை அவ்வமைப்பில் திருமாவளவன் இணைத்துக்கொண்டார்.

திருமாவளவன் தேர்தல் அரசியலுக்கு 1999-ம் ஆண்டு ஜி.கே.மூப்பனாரின் உந்துதலின் பெயரில் முதன்முறையாக த.மா.கா கூட்டணியுடன் இணைந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். அதற்காக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக திருமாவளவனின் பெயர் திருமால்வளவன் என இருந்ததாகக் கூறப்படுவது பொய் என அறிய முடிகிறது. 

” திருமாவளவனிற்கு அவரது தந்தை சோழ மன்னர்களின் ஒருவனான கரிகால சோழனின் பட்ட பெயர்களில் ஒன்றான திருமாவளவன் என்பதை வரலாற்று ரீதியாக நினைவு கூறும் வகையில் பெயர் வைத்துள்ளார். மேலும் திருமாவளவனின் உடன் பிறந்தவர்களின் பெயரும் செங்குட்டுவன், ராதாகிருஷ்ணன், பாரி வள்ளல் என்றே வைக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளன்று பிறந்ததினால் அவருக்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக “ வன்னி அரசு தெரிவித்தார். 

மேலும், வழக்கறிஞர் மணிகண்டன் இதே நிகழ்ச்சியில், டாக்டர்.அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். முகாமில் அனைத்து சாதியினரும் சரி சமமாக இருப்பதாக கூறியுள்ளார் என்றும், திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி பெருமையாக பேசியுள்ளார் என்றும் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அவை குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 

மேலும் படிக்க : ஆர்.எஸ்.எஸ்-ல் அனைத்து சாதியினரும் சரிசமம் என அம்பேத்கர் கூறியதாகப் பரப்பப்படும் ஆதாரமில்லா தகவல் !

மேலும் படிக்க : திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா ?

முடிவு :

நம் தேடலில், டாக்டர்.திருமாவளவனின் பெயர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக திருமால்வளவன் என இருந்ததாக வழக்கறிஞர் மணிகண்டன் குறிப்பிட்டது தவறான தகவல் என அறிய முடிகிறது. 1993ம் ஆண்டு அவர் அளித்த நேர்காணலிலேயே அவரது பெயர் திருமாவளவன் என்றே குறிப்பிடப்பட்டு இருப்பதினை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader