திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா ?

பரவிய செய்தி
RSS குறித்த திரு.தொல் திருமாவளவன் அவர்களின் பேச்சுரை. RSS குறித்த தவறான புரிதலை இதனைப் பார்த்த பின்னராவது மக்கள் மாற்றிக்கொள்வார்களா?
மதிப்பீடு
சுருக்கம்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையின் மீது அதன் ஆதரவாளர்கள் கொண்ட பற்றை எடுத்துரைத்த திருமாவளவன், கொள்கை மீதான விமர்சனத்தையும் வைத்து இருக்கிறார். முழு வீடியோ பதிவில் திருமாவளவன் பேசியதை பாருங்கள்.
விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனாதன தர்மத்திற்கு எதிராக தன்னுடைய குரலை ஒலிக்கச் செய்பவர். சனாதன பற்றாளர்களுக்கு எதிராக பேசக்கூடிய திருமாவளவன் அவர்களே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையை பற்றி பேசுவதாக ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உள்ளது.
உலக பிராமணர் ஒற்றுமை எனும் முகநூல் பக்கத்தில் “ ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கம் பற்றி தொல்.திருமாவளவன் பேசியது ” என மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டு இருந்தது. இதைத் தவிர சில முகநூல் பக்கத்திலும் கடந்த ஓராண்டாக இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
2018-ல் அக்டோபர் 19-ம் தேதி குன்னத்தூர் ஆறுமுகம் எனும் Youtube பக்கத்தில் ” RSS ன் பெருமையை பேசும் தொல்.திருமாவளவன் ” என்ற தலைப்பில் வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் திருமாவளவன் பேசியது,
” ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடைய மாநில தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?. மதுரை மாவட்ட தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? ஏன் தேசியத் தலைவர் பெயர் உங்களுக்கு தெரியுமா ?. அவர்கள் தங்களுடைய பெயரை போஸ்டர்களில், துண்டு அறிக்கையில் அச்சிட்டது உண்டதா ? என்றைக்காவது மேடையேறி பேசியது உண்டா ? தன் தலைவர் பின்னால் நின்றால் தான் தன்னுடைய முகம் தொலைக்காட்சியில் தெரியும் என மேடையில் முண்டியடித்து ஏறியதுண்டா ? நான் ஏன் பின்னால் உட்கார வேண்டும், நானும் முன்னால் தான் உட்காருவேன் என யாராவது முண்டியடித்து முன் வரிசையில் உட்கார்ந்ததை பார்த்ததுண்டா ?
ஆனால், அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள். இன்றொன்றையும் சொல்கிறேன், அவர்கள் இந்தியா முழுவதும் 13,000 பேர்கள் இருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இன்றைய புள்ளி விவரத்தின்படி. அந்த 13,000 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். முழு நேர பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எம்.எல்.ஏ ஆசை கிடையாது, எம்.பி ஆசை கிடையாது, மந்திரி ஆசை கிடையாது, அவர்களுக்கு விளம்பர ஆசை கிடையாது, ஆனால் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறார்கள். அந்த தியாகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக ? அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு கடமை உணர்ச்சி இருக்கிறது. அவர்கள் உள்வாங்கிக் கொண்ட கொள்கையின் மீது மிகப்பெரிய பிடிப்பு இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் வெறி இருக்கிறது “.
உண்மை என்ன ?
திருமாவளவன் பேசிய 1.33 நிமிட வீடியோ மட்டுமே பதிவிடப்பட்டு பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பெருமையாக பேசினாரா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம். திருமாவளவன் பேசிய முழு வீடியோ பதிவும் கிடைத்தால் உண்மை விளங்கி விடும் என முழு வீடியோ குறித்த தேடலை தொடங்கினோம்.
வெளிச்சம் டிவி எனும் youtube தளத்தில் 2018 அக்டோபர் 15-ம் தேதி ” தேசம் காப்போம் மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு தொல். திருமாவளவன் அழைப்பு ” என்ற தலைப்பில் மதுரையில் திருமாவளவன் ஆற்றிய முழு உரையின் வீடியோ பதிவிடப்பட்டது கிடைத்தது.
அந்த உரையில் தொல். திருமாவளவன் 14.27 நிமிடங்கள் பேசு இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையை பெறுகிறார் என பரவும் வீடியோவில் ” இன்னும் சொல்ல போனால் வெறி இருக்கிறது ” என்ற வார்த்தைக்கு பிறகு வீடியோ முடிவடைந்து இருக்கும். அதற்கு பின் அவர் கூறியது என்னவென்றால், ” அப்படிப்பட்ட வெறியர்களில் ஒருவன் தான் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என்பவன் ” எனத் தொடர்ந்து பேசி இருக்கிறார். இதனை வீடியோவில் 11.50 நிமிடத்தில் நீங்கள் பார்க்கலாம்.
திருமாவளவன் வஞ்சப்புகழ்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி பேசியிருக்கிறார். அதில், 1.33 நிமிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பெருமையாக பேசுவது போன்று பேசிய திருமாவளவன் பேச்சை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையை திருமாவளவன் பேசுவதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தவறான புரிதல் மாற்றிக் கொள்வார்களா என தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
முடிவு :
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையின் மீது அதன் ஆதரவாளர்கள் கொண்ட பற்றை தெளிவாக தன் ஆதரவாளர்களுக்கு எடுத்துரைத்து இருக்கிறார். மேலும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையை விமர்சித்து இருக்கிறார். அதனை வஞ்சப்புகழ்ச்சியாக பேசியுள்ளார் தொல்.திருமாவளவன். அவரின் பேச்சின் ஒரு பகுதி மட்டுமே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கூடுதல் தகவல் :
2022 அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எம்.பி திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அருமை பெருமைகளை தெரிந்ததால் தான் இன்று அதனை எதிர்க்கிறார் என தமிழக பாஜகவின் ஓபிசி அணியின் பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா ட்விட்டரில் திருமாவளவன் பேசும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை விமர்சித்து அதனை வஞ்சப்புகழ்ச்சியாக பேசிய வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது என நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். ஆனால், எம்.பி திருமாவளவன் பேசிய பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.