This article is from Mar 17, 2021

சிவன் கோவில்களை இடித்து புத்த விஹார்களை கட்ட விசிக குரல் கொடுக்கும் என பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி

திமுக வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களை இடித்துவிட்டு புத்த விஹார்களை கட்ட விசிக குரல் கொடுக்கும்.

மதிப்பீடு

விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ” திமுக வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களை இடித்துவிட்டு புத்த விஹார்களை கட்ட விசிக குரல் கொடுக்கும் ” என மு.க.ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டதாக ஒரு ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Archive link 

உண்மை என்ன ?

தொல்.திருமாவளவன் பதிவிட்ட ட்வீட் என பகிரப்படும் ஸ்க்ரீன்ஷார்டில் தேதி, நேரம் உள்ளிட்டவை ஏதுமில்லை. அவரின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், அப்படியொரு பதிவே இடம்பெறவில்லை. இப்படியொரு சர்ச்சையான பதிவை வெளியிட்டு இருந்தால் செய்திகளில் வெளியாகி எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து இருப்பர். அப்படி ஏதும் நடக்கவில்லை.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் கூறுகையில், ” இந்த போலியான எடிட் செய்யப்பட்ட ட்வீட் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்க செய்கிறார்கள். திருமாவளவன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்தவொரு பதிவும் வெளியிடவில்லை ” என தெரிவித்து இருந்தார்.

திருமாவளவன் சிவன் கோவில்கள், புத்த விஹார்கள் குறித்து ஏதேனும் பேசி இருக்கிறாரா எனத் தேடுகையில், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் குறித்து பேசுகையில் சிவன் கோவிலையும், புத்த விஹார்களையும் ஒற்றுமைப்படுத்தி வாதத்திற்காக பேசிய வீடியோவை 2019-ல் தமிழக பாஜக மற்றும் பலரும் பகிர்ந்து இருந்தார்.

Twitter link | Archive link

1.39 நிமிட வீடியோவில், ” அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. சான்றாவணங்களை காட்டுங்கள் என நாம் கேட்பது பொருத்தமற்றது. ஏனென்றால், ராமன் பிறந்திருந்தால் தானே காட்டமுடியும். ஒரு கற்பனை பாத்திரம். அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியே இருந்தாலும் 2000 ஆண்டுகள் இருப்பது தான் வரலாறு. அவர்கள் ஏதோ 50 ஆயிரம் ஆண்டுகள் முன்னால் பிறந்ததாகச் சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால், இன்றைக்கு சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கிற இடங்களில் எல்லாம் பெளத்த விஹார்கள் இருந்தன. பெளத்த விஹார்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டுத்தான் சிவன் கோயில்களை கட்டி இருக்கிறீர்கள். பெருமாள் கோவில்களை கட்டி இருக்கிறீர்கள். எனவே, அதையெல்லாம் இடித்து தரைமட்டமாக்கி விட்டு அந்த இடங்களில் பெளத்த விஹார்களை கட்டவேண்டும். உங்கள் வாதத்திற்காக சொல்கிறேன்.

ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால், 450 ஆண்டுகால வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் திருப்பதி ஏழுமலையான் இருக்கிற இடத்திலே பெளத்த விஹார்களை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கிற இடத்திலே புத்த விஹார்களை கட்ட வேண்டும். காஞ்சி காமாட்சி இருக்கிற இடத்திலே புத்த விஹார்களை கட்ட வேண்டும்.

இந்தியாவில் இருக்கிற சிவன், பெருமாள் கோவில்கள் ஒரு காலத்தில் பெளத்த, சமணக் கோயில்களாக இருந்தன. யாரும் மறுக்க முடியுமா ” என பேசி இருக்கிறார்.

கோவில்கள் பற்றி திருமாவளவன் பேசியது தொடர்பான முழுமையான வீடியோ 2017-ம் ஆண்டு டிசம்பரில் தந்தி டிவி செய்தியில் வெளியாகி இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் சிவன் கோவில்களை இடித்து பெளத்த விஹார்களை கட்ட வேண்டும் என வாதத்திற்காக பேசியதை அடிப்படையாக வைத்தே தற்போது போலியான ட்வீட் பதிவை உருவாக்கி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.

முடிவு :

நம் தேடலில், ” திமுக வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களை இடித்துவிட்டு புத்த விஹார்களை கட்ட விசிக குரல் கொடுக்கும் என தொல்.திருமாவளவன் பதிவிட்டதாக பரவும் ட்வீட் போலியானது. அது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader