தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என திருமாவளவன் கூறினாரா ?

பரவிய செய்தி
தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன் குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. – விசிக தலைவர் திருமாவளவன்.
மதிப்பீடு
விளக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்றும், இரட்டைமலை சீனிவாசன், குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறவில்லை எனக் கூறியதாக புதியதலைமுறை சேனலின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டது வருகிறது.
தலைவா !
பொங்கி எழு !
புலம்பாதே ! https://t.co/SnVB3qAbi3— சகடை 🇮🇳 (@srjk22) January 20, 2022
உண்மை என்ன ?
திருமாவளவன் தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை எனக் கூறியதாக எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை. புதியதலைமுறை சேனலின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்த போதும் அவ்வாறான எந்த செய்தியும் இடம்பெறவில்லை.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் ஜனவரி 18-ம் தேதி என இடம்பெற்று இருந்ததால், அந்த தேதியில் தேடுகையில், ” மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை தேவை. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் அமல்படுத்துக. துணைத்தலைவர் பதவிக்கு தலித் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ” என திருமாவளவன் கூறியதாகவே செய்தி வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியான நியூஸ் கார்டு ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன் குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என எம்.பி திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.