‘காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வர வாய்ப்பில்லை’ எனத் திருமாவளவன் கூறியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

பரவிய செய்தி

காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது. -திருமாவளவன் 

X link 

 

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்கிற பெயரில் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளது. அக்கூட்டணியில் தமிழ்நாட்டை பொருத்த அளவில் காங்கிரஸ், திமுக, விசிக, கம்யூனிஸ்ட் முதலிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது ’ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பில்லை’  எனக்  கூறியதாக   8 வினாடி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

திருமாவளவன்  பேசியதாக பரவும் வீடியோவில் ’பாலிமர் நியூஸ்’ லோகோ இருப்பதை பார்க்க முடிகிறது. இதனை கொண்டு அவர்களது அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம்.

இதன் முழு வீடியோ அவர்களது யூடியுப் பக்கத்தில் கடந்த 5ம் தேதி ’காங்கிரஸ் ஜெயிக்காது.. ஆனால்..? சட்டென திரும்பிய விசிகவினர் – திருமாவின் ரியாக்சன்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்ததது.

அதில் செய்தியாளர் ஒருவர் திருமாவளவனிடம், முதல்வர் கேஜ்ரிவால் கைது இந்திய கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், ’இந்திய கூட்டணிக்கு இதனால் எந்த பின்னடைவும் ஏற்படாது. N.D.A தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு தான் இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் ஏழு தொகுதிகளையும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும்’ எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், அங்கு ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வர வாய்ப்பில்லை என்று கூறி மறுகணமே மன்னிக்க வேண்டும் என்று சொல்லி பாஜக ஒரு இடத்தில் கூட வர வாய்ப்பில்லை எனத் திருத்திக் கூறியுள்ளார். 

மேலும், காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளிலும்  ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதிகளும் போட்டியிடுகிறது. ஏழு தொகுதிகளும் ‘காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெரும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.   இதே செய்தியை ‘நியூஸ் தமிழ் 24X7′ வீடியோவிலும் காண முடிகிறது.

இதிலிருந்து திருமாவளவன் பேசுகையில் பாஜக எனக் கூறுவதற்கு பதிலாக காங்கிரஸ் எனத் தவறுதலாக கூறியுள்ளார். இருப்பினும் அதனை உடனே சரி செய்து பாஜக என மாற்றிக் கூறியுள்ளதை காண முடிகிறது. ஆனால், அவர் தறுதலாக பேசிய 8 வினாடி வீடியோவை மட்டும் எடிட் செய்து பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

முடிவு :

காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என திருமாவளவன் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் பாஜக என்பதற்கு பதிலாக காங்கிரஸ் என தவறுதலாக பேசியுள்ளார். உடனே திருத்தி பாஜக என்றும் கூறியுள்ளார். ஆனால், தவறான பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்புகின்றனர். 

Please complete the required fields.
Back to top button
loader