This article is from Dec 29, 2020

யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோவா ?

பரவிய செய்தி

ஐயன் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ!!! பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்!! தீ வைத்து கொளுத்தப்பட்ட இலங்கை யாழ்பாண நூலகத்திலிருந்து கிடைத்ததாம்!

மதிப்பீடு

விளக்கம்

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய வள்ளுவர் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என இந்து, கிறிஸ்தவம், சமணம், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதை தொடர்ந்து பார்க்கிறோம். அதேபோல், அவர் எந்த மதத்தையம் சேர்ந்தவர் இல்லை எனக் கூறி விவாதமும் எழுகிறது.

இந்நிலையில், திருநீறு, பூணூல், ருத்ராட்சம் அணிந்து முனிவர் போல் இருப்பவரின் இப்படம் இலங்கையில் தீ வைத்து கொளுத்தப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ என சமூக வலைதளங்களில் சில ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ என வைரல் செய்யப்படும் படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019-ல் ஜி.கே.கமல் என்பவர் பாஜக தலைவர் எச்.ராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு பகிர்ந்த ட்வீட் பதிவில் புத்தகத்தில் அச்சிடப்பட்ட முழுமையான படம் கிடைத்தது.

அதில், படத்திற்கு கீழே, ” திருநெல்வேலித் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்பக் கழகத்தார் வரைந்த ஓவியம் ” என இடம்பெற்று இருக்கிறது. இதுவும் கற்பனையாக வரையப்பட்ட மாதிரி ஓவியமே தவிர யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து கிடைத்த ஓவியம் அல்ல.

திருவள்ளுவரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாத காரணத்தினால் பொதுவான உருவமாக வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியத்தை அரசு அங்கீகரித்து பயன்படுத்தி வருகிறது. அதேநேரத்தில், ஒவ்வொரு மதத்தினரும், மதச்சார்பற்றவர்களும் என பலரும் திருவள்ளுவருக்கு பலவிதமான உருவத்தை அளித்து படங்களை வெளியிடுகின்றனர்.

விரிவாக படிக்க : திருக்குறள் அடிப்படை கிறிஸ்தவமே என வெளியான புத்தகம் | திருவள்ளுவருக்கு மத சாயமா ?

திருவள்ளுவரின் மதம் குறித்த விவாதம் மட்டுமின்றி அவர் எந்த சாதிக்குரியவர் என்கிற பேச்சுகளும் அடிபடுகிறது. திருவள்ளுவரை வைத்து பல்வேறு சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அது தொடர்பாக நாமும் பலமுறை கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.

விரிவாக படிக்க: “வரலாற்று பிழை” எனக் கட்டுரை வெளியிட்ட துக்ளக்| அரசியலுக்குள் சிக்கும் வள்ளுவர் !

முடிவு : 

நம் தேடலில், இலங்கை யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து கிடைத்த திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ என பரப்பப்படும் புகைப்படம் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்பக் கழகத்தார் மூலம் கற்பனையாக வரையப்பட்ட மாதிரி ஓவியமே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader