திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரத்தை மறைத்து தமிழ்நாடு அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதாக பாஜகவினர் பரப்பும் தவறான தகவல் !

பரவிய செய்தி
கோவில் நிதி ₹6.4 கோடியை எடுத்து கோபுரத்தை மறைத்து கோவில் இடத்திலேயே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதுதான் சனாதன ஒழிப்பு ! திராவிட மாடல் அரசு
மதிப்பீடு
விளக்கம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுரத்தை மறைத்து கோவில் இடத்தில் தமிழ்நாடு அரசு ரூ.6.4 கோடி செலவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட இருப்பதாகத் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே தகவலை பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
திருவண்ணாமலை ராஜகோபுரத்தை மறைத்து கடைகள் கட்டுவதற்கு ₹6.4 கோடி ஒதுக்கியுள்ளது சனாதன ஒழிப்பு திராவிட மாடல் அரசு.
திருட்டு திமுகவுக்கு மூடு விழா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்துக்கள் விரைவில் செய்து காட்டுவார்கள். 👊🏼#Save_Tiruvannamalai_Temple pic.twitter.com/3SVUaLVufT
— Karthi 🇮🇳 (@SaffronSurge3) November 8, 2023
உண்மை என்ன ?
திருவண்ணாமலை கோயில் கிழக்கு கோபுரம் அருகே கட்டப்படுகிற கட்டிடம் குறித்து ‘மாலை மலர்’ இணையதளத்தில் கடந்த (2023) அக்டோபர் 20ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அத்திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்துள்ளார்.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்த 16 கால் மண்டபம் 1996ம் ஆண்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்தது. அவ்விபத்தின்போது மண்டபத்திற்கு அருகில் இருந்த கடைகளும் எரிந்து சேதமாகியது. பிறகு மண்டபம் சரி செய்யப்பட்டது. அங்கிருந்த கடைக்காரர்கள் தென் ஒத்தவாடை தெருவில் கடைகளை அமைத்துக் கொள்ளக் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
தற்காலிக கடைகள் மாற்று இடத்தில் அமைக்கப்பட்டாலும் பழைய இடத்தில் கடைகள் அமைத்துத் தர வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டு வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக 2014ம் ஆண்டு சுமார் 50 கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான செய்தி ‘தினமணி’ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் இருந்து கோயிலுக்கு முன்பாக கட்டப்படுவது பொதுவாகக் கோயில்களுக்கு அருகில் அமைக்கப்படும் சிறு வியாபாரிகளுக்கான கடைகள் என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாக கோயில் கோபுரத்தை மறைத்து கட்டடம் கட்டப்பட இருப்பதாக பரப்பப்படுகிறது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் அவர்களை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில் ‘அது முற்றிலும் தவறான தகவல்’ என கூறியதுடன், கடைகள் அமைய உள்ள இடம், அதற்கான வரைபடம் முதலிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. அக்கோபுரத்தின் கல்காரம் 34 அடி உயரம் கொண்டதாகும்.
கிழக்கு கோபுரத்தின் முன் பக்கம் 25 அடி தள்ளி கடைகள் அமைய இருக்கின்றன. கோபுரத்தின் தென்புறத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சேர்த்து 6028 சதுர அடியில் 56 கடைகளும், வடபுறத்தில் 3432 சதுர அடியில் 94 கடைகளுமென மொத்தமாக 150 கடைகள் அமைய உள்ளது. (இணைக்கப்பட்டுள்ள வரைபடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் தெளிவாக புரியும்.)

கிழக்கு கோபுரத்தின் தென்புறத்தில் கட்டப்படும் கடைகள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை சேர்த்து 26.5 அடி உயரம் கொண்டது (அடித்தளம் 2.5 அடி, தரை தளம் 11 அடி, முதல் தளம் 11 அடி, மாடி சுவர் 2 அடி). மற்றொரு பக்கமான வடபுறத்தில் கட்டப்படும் கடைகள் 15.5 அடி உயரம் கொண்டது (அடித்தளம் 2.5 அடி, தரை தளம் 11 அடி, மாடி சுவர் 2 அடி).
கோபுரத்தின் பக்கவாட்டில் அமைய இருக்கின்ற கடைகளின் அதிகபட்ச உயரமே 26.5 அடிதான். இந்த உயரம் என்பது ராஜகோபுரத்தின் மொத்த உயரமான 217 அடியில் சுமார் 8ல் ஒரு பங்குதான். இது எப்படி ராஜகோபுரத்தை மறைக்கும்?
கடைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டதும் ‘கோயில்களின் தொன்மையை பாதிக்கும் வகையில் எந்த பணிகளும் செய்யக்கூடாது’ என இதற்கு எதிராக பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்தது.
ஆனால், 1996ம் ஆண்டு தீ விபத்துக்குப் பிறகு அவ்விடத்தில் கடைகள் கட்டப்படாததினால், வியாபாரிகள் தாங்களாகக் கோயிலை ஒட்டிய இடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துக் கொண்டுள்ளனர். இதனால் கோயில் சுவர் சேதமடைவதையடுத்து அவற்றை அகற்றிவிட்டு பழைய இடத்தில் கடைகள் கட்டித்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இது அவ்வியாபாரிகளின் நீண்டகால கோரிக்கையுமாகும்.
முடிவு :
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தை மறைத்து இந்து சமய அறநிலையத்துறை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட இருப்பதாகப் பரவும் தகவல் தவறானது.
அது கோயில் அருகே சிறு வியாபாரிகளுக்காகக் கட்டப்படும் கடைகள். மேலும், ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. கடைகளுக்கான கட்டிடத்தின் மொத்த உயரம் 26.5 அடி மட்டுமே. இது கோயில் கோபுரத்தை மறைக்காது.
கூடுதல் தகவல் :
திருவண்ணாமலை ராஜகோபுரம் எதிரே வணிக வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில், அடுக்குமாடி வணிக வளாக கட்டிடம் 40 அடி வரையிலான உயரத்திற்கு கட்டப்படுவதாகவும், இந்த பணிகள் முடிந்தால் கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது சம்பந்தமாக எந்த விபரங்களையும் கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வணிக வளாக கட்டிடத்தின் அதிகப்பட்ச உயரமே 26.5 அடி தான், 40 அடி அல்ல. இது கோயில் கோபுரத்தை மறைக்காது. இதற்கான வரைபடமும் தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமாக கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.