தூத்துக்குடி சிப்காட் பகுதி நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல – மத்தியமைச்சர்

பரவிய செய்தி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அமைந்திருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல – மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்.
மதிப்பீடு
சுருக்கம்
ராஜ்ய சபாவில் சசிகலா புஷ்பா MP கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிபிகாட்டை சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என பதிலளித்தார்.
விளக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். ஆலை விதிகளை மீறி நடந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக மக்களால் நடத்தப்பட்ட நூறு நாட்கள் போராட்டம் பெரும் சம்பவத்துடன் முடிவடைந்து தமிழ்நாட்டையே தூத்துக்குடி பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து அரசு ஆலையை மூட உத்தரவிட்டது.
ராஜ்ய சபாவில் அஇஅதிமுக MP சசிகலா புஷ்பா, ஸ்டெர்லைட் எதிர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள நிலத்தடி நீரின் தன்மையை சரிபார்க்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததா மற்றும் ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபாடு காரணமாக நீர் அசுத்தப்படுத்தபட்டதா எனக்கேட்டார்.
அதற்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்: “மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் (CGWB) தூத்துக்குடி SIPCOT தொழிற்துறை பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியிலும் உள்ள நிலத்தடி நீர் தரத்தை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. ”
“ஆய்வில் பெரும்பாலான நிலத்தடி நீர் மாதிரிகளில் குடிநீருக்கான இந்திய தர நிர்ணயம் (Bureau of Indian Standards) அனுமதித்த அளவை விட இரும்பு லெட், காட்மியம், குரோமியம், மாங்கனீஸ், மற்றும் ஆர்சனிக் போன்ற உலோகங்கள் அதிகமாக இருக்கிறது தெரியவந்தது “என்று அவர் கூறினார்.
மேலும் “மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பெறப்பட்ட தகவல்களின் படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பெறப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதியில் இருந்த நிலத்தடி நீர் மாதிரிகளில் BIS அனுமதித்த அளவை விட இரும்பு, லெட் , ஃப்ளூரைடு, காட்மியம் மற்றும் நிக்கல் ஆகியவை இருந்தது ” என்றார்.
“மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ,நீர் ( மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) 1974 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் தொழில்துறை மாசுபாட்டை கட்டுப்படுத்துகிறது. ஒப்புதலின் நிபந்தனைகளுக்கு பின்பற்றாததின் காரணமாக, 23.5.2018 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டுள்ளது. “என அமைச்சர் கூறினார்.
ஸ்டெர்லைட் பகுதியில் எந்த வித மாசும் ஏற்படவில்லை அதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை தேவை இல்லாமல் பழி சொல்கிறார்கள் என்று தொடர்ந்து பேசி வந்த சிலருக்கு அமைச்சர் அளித்த பதிலாவது உண்மையை உரைக்க செய்யும் என நம்புவோம்.