VPN மூலம் இன்டர்நெட் பயன்படுத்த முடியுமா ?

பரவிய செய்தி
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம். ஆகையால், இது போன்ற VPN App ஐ download செய்து பயன்படுத்துங்கள். வேறு நாட்டின் server உடன் தொடர்பை ஏற்படுத்தி இன்டர்நெட் வேலை செய்யும். பணம் ஏதும் செலவாகாது..
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்த பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 10-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் போலீஸ் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகளவில் மீம், கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், தூத்துக்குடி போராட்டம் குறித்து வதந்திகள் பரவுவதாக அங்குள்ள இன்டர்நெட் சேவையை முடக்கி உள்ளனர். அங்கு நடப்பவைகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகாமல் இருக்க அனைத்து இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அங்குள்ளவர்கள் VPN என்ற ஆஃப் பயன்படுத்தி இலவசமாக இன்டர்நெட் உபயோகிக்கும் முறை உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகிறது. ஆனால், அவை அனைத்தும் தவறான தகவல்களே.
VPN என்றால் என்ன ?
Virtual Private Network என்பது நீங்கள் உங்கள் இணைய சேவையை பாதுகாப்பாக பயன்படுத்த உதவுவது தான் vpn சேவை. உங்கள் ப்ரைவசி முழுமையாக பாதுகாக்கப்படும். கார்பரேட் நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகாமல் இருக்க VPN சேவை பயன்படுத்துவது வழக்கம். அதேபோன்று தனி நபர் செல்போன் பயன்பாட்டிலும் இதை பயன்படுத்தலாம்.
VPN-ஐ பயன்படுத்தி பொது இடங்களில் இலவசமாக அல்லது வேறு ஒருவரின் இன்டர்நெட் பயன்படுத்தி பார்க்கப்படும் இணையதளங்கள் உள்ளிட்ட உங்கள் ப்ரைவசி வெளியாகாமல் இருக்க இந்த சேவை உதவுகிறது. VPN சேவையால் ஒருவர் பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் தகவல்களை ISP இணையதள இணைப்பை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கூட பாதுகாப்பாக மறைக்க முடிகிறது.
செயலியின் உதவியோடு VPN சேவையால் இணைய இருப்பிடத்தை மாற்றும் வசதியும் உள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு லண்டன் , அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருப்பது போன்று இணையதளத்தை பயன்படுத்த முடியும். இங்கு பார்க்க இயலாத வீடியோ, இணையதளம் உள்ளிட்டவைகளுக்காக இவ்வாறு நாடுகள் கடந்து VPN சேவையால் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல், வளைகுடா நாடுகளில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் VOICE call மூலம் உலகின் அடுத்த மூலையில் உள்ளவர்களிடம் பேச அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால், VPN சேவையின் மூலம் தங்களின் இருப்பிடத்தை வேறு தடத்தில் மாற்றி அடுத்த முனையில் உள்ளவர்களுடன் பேசி வருகின்றனர்.
இணையத்தை வலுப்படுத்தியும், பாதுகாப்பாக பயன்படுத்த மட்டுமே VPN சேவை உதவுகிறதே தவிர இன்டர்நெட் வழங்குவதில்லை. APP மூலம் VPN சேவை பெறவும் இன்டர்நெட் அவசியமே. ஆக ,VPN மூலம் இலவசமாக இன்டர்நெட் பயன்படுத்தவும் என்று கூறுவது தவறான செய்தி என்பது தெளிவாகி உள்ளது. இனி, தேவையற்ற செய்தியை பகிர்வதை விட்டு அங்கு அமைதி திரும்ப தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.
Fire chat:
இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள இயலாத நிலை தூத்துக்குடியில் நிலவுகிறது. எனினும், ” Fire chat “ என்ற ஆஃப் மூலம் மற்ற பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவை இல்லை என்றுக் கூறி மற்றொரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன.
Fire chat ஆஃப் மூலமாக இன்டர்நெட் மற்றும் நெட்வொர்க் சேவை இல்லாமல் தகவலை பரப்புகிறார்கள். அது உண்மையே எனினும் Fire chat பயனாளர்கள் 100 அடி தொலைவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இணைக்கப்பட்டு செய்தியை அனுப்ப இயலும். இதில் ப்ளுடூத் அல்லது wifi சேவையின் வாயிலாக செய்திகளை அனுப்ப முடிகிறது. mesh நெட்வொர்க் மூலமாக நான் அனுப்பும் செய்தி சரியாக அதை பெறக் கூடிய நபருக்கு சென்றடைகிறது. ப்ளுடூத் பயன்படுத்தி Fire chat-ல் செய்தி அனுப்ப இயலும் என்றாலும், Fire chat-ல் அக்கௌன்ட் ஓபன் செய்தி மெயில் ஐடி போன்றவற்றை கொடுத்து login செய்யும் வரை இன்டர்நெட் கட்டாயம் தேவை. சீனாவில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த நேரத்தில் மாணவர்கள் இணைய வசதி பயன்படாத ” Fire chat ” மூலம் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆக, இதுவும் பெரிய பயன்பாடு அல்ல. இணையம் இல்லாத நேரத்தில் இதை போன்ற வதந்திகள் ஒருவிதமான உபயோகமும் அற்றது. அதிகாரிகள் தரப்பில் தகவல் பரிமாற்றம் மற்றும் வதந்திகளால் வன்முறை கட்டுப்படுத்த முடியாத சூழலுக்கு வரும் என இணையத்தை முடக்கி உள்ளனர். பொதுமக்கள் காவல்துறை தரப்பில் நடத்தப்படும் தாக்குதலையும், முறைகேடுகளையும் எப்படி வெளி கொண்டு வருவது. மக்கள் ஊடகமான சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்த முடியவில்லை எனில் நடக்கும் மனித உரிமை மீறலை எப்படி உலகிற்கு சொல்வது என்று அஞ்சுகிறார்கள். அமைதி திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தூத்துக்குடி நிற்கிறது.அதே நேரத்தில் மக்கள் மீது அடக்குமுறையையும் நிகழ்த்தி காட்ட கூடாது. உபயோகமற்ற செய்திகளால், வந்ததிகளால் நன்மை விளையப் போவதில்லை.