This article is from May 29, 2018

தேவாலயத்தில் போலீஸ் தாக்குதல்: தூத்துக்குடியில் நிகழ்ந்ததா ?

பரவிய செய்தி

தூத்துக்குடி தேவாலயத்தில் காவல்துறையை தாக்க கற்கள், சோடா பாட்டில்கள் உடன் பதுங்கியிருந்த பனிமயமாதா தேவாலய ஊழியர்கள். உள்ளே சென்று வெளுத்து வாங்கியது போலீஸ்.

மதிப்பீடு

விளக்கம்

தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பொதுமக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல கண்டன கருத்துகள், மீம்கள், வீடியோக்கள் வெளியாகினாலும, பலர் தவறான வதந்திகளையும், மதம் சார்ந்த வெறுப்பு பதிவுகளையும் பதிவிட்டனர்.

சிலர் தூத்துக்குடி போராட்டத்தை மக்களின் வாழ்வாதார போராட்டமாக பார்க்காமல் சமூக விரோதிகள், மத அடிப்படையில், கட்சியின் அடிப்படையிலேயே தவறான கருத்துகளை முன்வைத்தனர். அதில், பல செய்திகள் புரளிகள் என நிரூபிக்கப்பட்டன. எனினும், புரளிகள் ஓய்ந்த பாடில்லை.

தூத்துக்குடியில் காவல்துறையினரை தாக்குவதற்கு கற்கள், சோடா பாட்டில்களுடன் பனிமயமாதா தேவாலய ஊழியர்கள் பதுங்கி இருந்ததை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் தாக்கியதாகக் கூறி வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. ஆனால், இவையும் புரளியே..!

பனிமயமாதா தேவாலயத்தில் காவல்துறை தாக்கியதாகக் கூறிய வீடியோ 2008 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் குலசேகர் தேவாலயத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் ஆகும். ஓடிசாவில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடகாவின் மங்களூரில் உள்ள கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், ஹிந்து அதிரடிப்படைகள் மனிப்புக் கூற வேண்டும் என்றுக் கூறி பிரச்சாரக் கூட்டத்தை ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியில் “ New Life was Responsible “ என்ற கிறிஸ்தவ அமைப்பு நடத்தினர்.

ஸ்ரீ ராமா சேனை மற்றும் பஜ்ராங் தல் ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் மங்களூரில் உள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிராத்தனை கூடங்களை தாக்கினர். இதற்கு மறைமுகமாக கத்ரி காவல் நிலையத்தின் காவல் துணை கண்காணிப்பாளர் எம்.கே. கணபதி ஆதரவு அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ” இந்த வீடியோ பதிவில் காவல்துறையினர் செப்டம்பர் 24-ம் தேதி குலசேகர் தேவாலயத்திற்குள் சென்று பிராத்தனையில் இருந்தவர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறினர். ஆனால், பிராத்தனையை முடிக்காமல் வெளியேற முடியாது என்றவர்களை தேவாலயத்திற்குள் சென்று வெளியேற்றினர், மேலும் லத்தி சார்ச்நடத்தி அவர்களை காவல்துறையினர் தாக்கினர். சில கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன “.

கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தியதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை நடத்திய காவல் துணை கண்காணிப்பாளர் பலமுறை கணபதி பணிமாற்றம் மற்றும் துறைச் சார்ந்த நடவடிக்கையில் சிக்கியுள்ளார். 2008-ல் காவல் துணை கண்காணிப்பாளர் கணபதியின் அராஜக நடவடிக்கைக்கு கர்நாடகா ஊரக வளர்ச்சி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கர்நாடகா எதிர்க் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2008-ல் கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவத்தை 2018-ல் தூத்துக்குடி தேவாலயத்தில் நிகழ்ந்ததாகக் கூறி வதந்தியை பரப்பியுள்ளனர். மேலும், போராடும் மக்களின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கவும் இதுபோன்ற பதிவுகளை வெளியிடுகின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader