This article is from Oct 10, 2019

மூன்று கண்கள், மூன்று கொம்புகள் கொண்ட அதிசய காளையா ?| எங்குள்ளது ?

பரவிய செய்தி

மூன்று கண்ணும்,மூன்று கொம்பும் கொண்ட அதிசய காளை.

மதிப்பீடு

விளக்கம்

நம் நாட்டில் அசாதாரணமாகவோ அல்லது வித்தியாசமாகவோ காட்சியளித்தால் அதனை ஆச்சரியமாக கருதுவார்கள். இந்தியாவில் மாடுகளை ஆன்மிகம் சார்ந்து பூஜித்து, வழிபாடுகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக, பசுக்களை.

Archived link  

இந்நிலையில், மாட்டிற்கு மூன்று கொம்புகள் மற்றும் மூன்று கண்கள் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த ஆண்டில் இருந்து பதிவிட்டு இருக்கிறார்கள். அத்தகைய வீடியோவில் மூன்று கொம்புகளை கொண்ட மாட்டினை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ வடஇந்தியாவில் அதிகம் வைரலான செய்தி. எனவே, மூன்று கண்கள் இருப்பதாக கூறுவதும், இந்த மாடு எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.

video Archived link  

அபூர்வமான மாடு : 

மூன்று கொம்புகளை கொண்டிருக்கும் மாடானது மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. வீடியோவுடன் இடம்பெறும் கூற்றின்படி மாட்டிற்கு மூன்று கொம்புகள் இருக்கின்றன. ஆனால், இந்து கடவுளான சிவனிற்கு இருப்பது போன்று மூன்று கண்கள் இல்லை.

இந்த காளைக்கு மூன்று கொம்புகள் மட்டுமே வளர்ந்து உள்ளன , இரண்டு கண்களுக்கு நடுவில் மூன்றாவது கண் போல இருப்பது மூன்றாவது கொம்பின் அடிப்பாகம். அதன் அடையாளமே கண் போன்று காட்சியளிக்கிறது. 2016-ம் ஆண்டில் நடைபெற்ற உஜ்ஜைன் சிம்ஹஸ்தா மஹாகும்ப மேளாவிற்கு சாட்டர்பூர் பகுதியை சேர்ந்த பல்தேவ் மகாராஜ் என்பவரால் இக்காளையானது கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்து கடவுளான சிவனின் வாகனம் என அழைக்கப்படும் நந்தியின் வடிவமாக காளை காட்சியளித்த காரணத்தினால் சுற்றுலாவாசிகள் , பக்தர்கள் என பலரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது. அசாதாரண தோற்றத்தில் இருந்த காளையை நந்தி என மக்கள் வழிபாடுகளை செய்ததாக கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு மே 1-ம் தேதி நவபாரத் டைம்ஸ் இணையதளத்தில் ” Three horned Nandi is the center of attraction in Simhastha Kumbh ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் மூன்று கொம்புகள் கொண்ட நந்தி சிம்ஹஸ்தா கும்பமேளாவில் கவனத்தை ஈர்த்து இருந்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.

எனினும், இந்த காளையானது எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், மூன்று கொம்புகள் கொண்ட காளையை விவசாயி ஒருவர் ஆசிரமத்தில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அசாதரணமான தோற்றத்தில் உயிரினங்கள் பிறப்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அனைத்து உயிரிகளிலும் இப்படி நிகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. மாடு அரிதாக மூன்று அல்லது நான்கு கொம்புகள் உடன் மற்றும் மூன்று கண்கள் உடன் பிறப்பதும் நிகழ்ந்து இருக்கிறது. மனிதர்களுக்கு கூட நான்கு கை, கால்கள் உடன் குழந்தைகள் பிறக்கின்றன.

முடிவு : 

நம்முடைய தேடலில், மூன்று கொம்புகள் , மூன்று கண்கள் கொண்ட காளை என சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில் இருக்கும் மாட்டிற்கு மூன்று கொம்புகள் மட்டுமே உள்ளன. மூன்றாவது கண் இல்லை. அது கொம்பின் அடிப்பாகமே. இந்த காளை மத்தியப் பிரதேசத்தில் வளர்க்கப்படுகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader