This article is from Apr 20, 2020

இந்து சாமியார் முஸ்லீம்களால் அடித்து கொலையா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

காவல்துறையை துலுக்கனிடம் இருந்து காப்பாற்ற சென்ற காவி அடித்துக் கொல்லப்பட்டார். பிஜேபி இன்னும் வேடிக்கை பார்த்தால் என்ன நியாயம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

நாம் இந்து எனும் முகநூல் பக்கத்தில் ” காவல்துறையை துலுக்கனிடம் இருந்து காப்பாற்ற சென்ற காவி அடித்து கொல்லப்பட்டார். பிஜேபி இன்னும் வேடிக்கை பார்த்தால் என்ன நியாயம் ” என்று வாசகத்துடன் இரு வீடியோக்கள் பதிவிட்டப்பட்டது உள்ளது.

முதல் வீடியோவில், போலீஸ் உடன் வரும் காவி நிற உடைய அணிந்த முதியவரை அங்குள்ள மக்கள் தாக்கும் காட்சிகளும், இரண்டாவது வீடியோவில் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு மற்றொரு நபரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஏற்கனவே கொரோனா வைரசை பரப்புவது முஸ்லீம்கள் தான் என வதந்திகளை பரப்பி வருகையில் இந்து சாமியாரை முஸ்லீம்கள் தாக்கியதாக இவ்வீடியோ வைரல் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால், வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் இக்கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடும் கும்பல் என பரவிய வதந்தியால் 70 வயது முதியவர் உள்பட 3 பேர் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக ஏப்ரல் 18-ம் தேதி NDTV செய்தியில் வைரலான வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முன்னணி செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது. பால்கர் மாவட்டத்தில் உள்ள கடக்சிஞ்சாலே கிராம பகுதியின் வழியாக துக்க காரியத்திற்கு காரில் சென்றவர்களை மறித்த மக்கள் திருடர்கள், குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்து அவர்களை 90-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். கார் ஓட்டுநர் போலீசுக்கு அளித்த தகவலில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். எனினும், அவர்களால் கும்பலை தடுக்க முடியவில்லை. இதையடுத்து, காவல்துறையின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர்.

கும்பலால் தாக்கப்படட சுஷில்கிரி மகாராஜ், நிலேஷ் தேல்கதே மற்றும் ஜெயேஷ் தேல்கதே இறந்துள்ளனர். இதில் இரண்டு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் காஸா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக, காவல் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை திருடர்கள் என நினைத்து தாக்கிய சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது என இந்தியா டுடே செய்தியில் தகவல் வெளியாகி இருக்கிறது.

பால்கர் மாவட்டத்தில் 2 சாதுக்கள் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பால்கர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட ட்வீட் பதிவில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 110 பேரில் 9 பேர் சிறுவர்கள் என்றும், 101 பெறும் ஏப்ரல் 30-ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் இருக்க போவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், பால்கர் மாவட்ட தாக்குதல் சம்பவம் மதம் சார்ந்த கண்னோட்டத்தில் பரப்பப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் இந்து சாதுக்களை தாக்கி கொன்றாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ஓர் தவறான கருத்தை உருவாக்கி வருகிறார்கள். 2 இந்து சத்துக்களை கொன்றது முஸ்லீம்கள் எனக் கூறும் தகவலுக்கு ஆதாரங்கள் இல்லை.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம் அல்லாதவர்களே. அங்கு படிப்பறிவு வீதம் 30%-ஐ தாண்டவில்லை. பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை பார்ப்பவர்கள். அப்பகுதியில் குழந்தை கடத்தல் மற்றும் திருடர்கள் என பரவும் வதந்திகளை உண்மை என நினைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, ” காவல்துறையை துலுக்கனிடம் இருந்து காப்பாற்ற சென்ற காவி அடித்துக் கொல்லப்பட்டார் என பரப்பப்படும் தகவல் தவறானது. வீடியோவில் தாக்கப்படுபவர்கள் திருடர்கள் என நினைத்து ஊர் மக்களால் தாக்கி கொல்லப்பட்டவர்கள்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader