அண்ணாமலையை கழுதையாகச் சித்தரித்து துக்ளக் கேலிச்சித்திரம் வெளியிட்டதா ?

பரவிய செய்தி

இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் தின்னுருக்கேன், நீ எத்தனை தின்னுருக்கே! – துக்ளக் 

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த மார்ச் மாதம் மதுரை, விளாச்சேரியில் உள்ள மகளிர் கலைக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தான் இது வரையில் 20,000 புத்தகங்கள் படித்திருப்பதாகக் கூறினார்

அவர் இப்படிப் பேசியதைத் தொடர்ந்து துக்ளக் ஒரு கேலிச்சித்திரத்தினை தனது அட்டைப் படத்தில் வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் இப்படம் பரப்பப்படுகிறது.

அப்படத்தில் உள்ள இரண்டு கழுதைகளில் ஒரு கழுதை “இதுவரையில் தான் 20,000 புத்தகங்கள் சாப்பிட்டு இருப்பதாகவும், நீ எத்தனை சாப்பிட்டு இருக்கிறார்” என மற்றொரு கழுதையிடம் கேட்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

துக்ளக் பத்திரிகை அண்ணாமலையைக் கழுதையாகச் சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதாகப் பரப்பப்படும் படத்தினை உற்று நோக்குகையில், அது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. மேலும், அப்படம் குறித்த உண்மைத் தன்மையைத் தேடினோம்.

அன்பு என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டதை ஸ்கிரின்ஷார்ட் எடுத்து பலரும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அப்பதிவினை பரப்பி வருகின்றனர்.

அந்த அட்டைப் படத்தில் “11.11.2020” என இருப்பதைக் காண முடிகிறது. அன்றைய தேதியில் வெளியான துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப்படம் துக்ளக்கின் இணையதளத்தில் கிடைக்கப்பட்டது.

2020, நவம்பர் 11 எனத் தேதி குறிப்பிட்டு வெளி வந்துள்ள துக்ளக் பத்திரிகையில் இரண்டு கழுதை படத்துடன் கேலிச்சித்திரம் வெளிவந்துள்ளது. ஆனால், அதில் அண்ணாமலை பேசிய 20,000 புத்தகங்கள் பற்றிய எந்த வாசகங்களும் இடம் பெறவில்லை. 

அதில், “ரஜினி,கட்சித் தொடங்குவது சந்தேகமே” என ஒரு செய்தித்தாள் கீழே இருப்பது போலவும், அதனைப் பார்க்கும் இரண்டு கழுதைகள் “சரிவிடு, இது உண்மையா இருந்தால் நம்ம கூட்டத்தைச் சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான் வரும். நமக்கு தீனிக்குப் பஞ்சம் இருக்காது” எனப் பேசுவது போலக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்பத்திரிக்கையில் “மாறும் ரஜினி முடிவு – உற்சாகத்தில் தி.மு.க.” எனக் கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்ற செய்தியால், திமுக மற்றும் அதிமுக காரர்களுக்கு உற்சாகத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், பாஜக தலைவர் அண்ணாமலை 20,000 புத்தகங்கள் படித்ததாகப் பேசியது குறித்து, துக்ளக் பத்திரிகை அவரை கழுதையாகச் சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மை அல்ல. அது எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader