This article is from Jun 12, 2020

இந்த மாப்பிள்ளை கைதா ?

பரவிய செய்தி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த மாப்பிள்ளையின் நண்பன், மாப்பிளை, இருவீட்டாரின் குடும்பத்தினர் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண்ணுக்கு 17 வயது தான் என்பதால் அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

தோற்றத்தில் சிறுவர்களாக இருக்கும் மணமக்களின் திருமண வீடியோ டிக்டாக்கில் பாடலுடன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 90-ஸ் கிட்ஸ் இளைஞர்களை குறிப்பிட்டு 2கே கிட்ஸ்களின் திருமணம் என கிண்டல், கேலிக்காக இவ்வீடியோக்கள் வைரல் செய்யப்பட்டன.

அவற்றில் குறிப்பாக, இவ்விருவரின் வீடியோ மட்டும் தொடர்ந்து வைரல் செய்யப்பட்டு தற்போது மணமகன் கைது செய்யப்பட்டு உள்ளதாக மீம்ஸ் போடப்பட்டு வருகிறது. திருமண கோலத்தில் இருக்கும் இவர்களின் வீடியோ மற்றும் புகைப்படம் குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?

வைரலாகும் மீம் பதிவில் திருமண கோலத்தில் இருக்கும் பையனுக்கும், போலீஸ் அழைத்து செல்லும் புகைப்படத்தில் இருப்பவருக்கும் வித்தியாசங்கள் இருப்பதை காண முடிந்தது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் திருமணம் டிக்டாக் வீடியோவில் வெளியாகி, மாப்பிளை கைது எனக் கூறும் சம்பவம் உண்மையா எனத் தேடும் பொழுது, திருச்சியில் மைனர் பெண்ணின் திருமணம் குறித்த செய்தி கிடைத்தது.

” திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மைனர் பெண்ணுக்கு நடந்த திருமணம் டிக்டாக் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வையம்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும், பழனிச்சாமி என்பவருக்கும்(21) கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அப்பகுதி இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன் பழனிசாமியை கைது செய்தனர். மைனர் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார் ” என ஜூன் 11-ம் தேதி தந்தி செய்தியில் வெளியாகி உள்ளது.

அதேபோல், நியூஸ் ஜெ சேனலில் செய்தியாகவும் வெளியாகி இருக்கிறது. செய்தியில் இடம்பெற்ற திருமண தம்பதிகளும், வைரலாகும் வீடியோவில் இருப்பவர்களும் வெவ்வேறாக உள்ளனர். மேலும், போலீசார் மணமகனை கைது செய்து அழைத்து செல்லும் புகைப்படம் குறித்து தேடிய பொழுது செய்திசோலை எனும் இணையதளத்தில் அப்புகைப்படத்துடன் மேற்காணும் செய்திகளில் வெளியான தகவலையே வெளியிட்டு உள்ளனர்.

திருச்சியில் 17 வயதான மைனர் பெண்ணின் திருமணம் டிக்டாக் வீடியோ மூலமே வெளிச்சத்திற்கு வந்து மணமகன் கைது செய்யப்ட்டுள்ளார். அந்த செய்தியை எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் கிண்டலுக்காக வைரல் செய்யப்பட்ட வீடியோ உடன் தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.

வைரலாகும் வீடியோவில் தேதி 10-6-2020 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, மைனர் பெண்ணை திருமணம் செய்தது செய்தியில் கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் இருவர் குறித்த எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இவர்கள் குறித்த தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதையும் இணைக்க உள்ளோம். இந்த வீடியோ முதலில் குழந்தை திருமணம் என கிண்டலுக்கு பகிரத் தொடங்கி பிறகு கைது செய்யப்பட்டு உள்ளதாக பரவி வருகிறது. யாரோ வேண்டுமென்றே இந்த தகவலை பரப்பி இருக்கக்கூடும்.

முடிவு : 

நம்முடைய தேடலில், சமூக வலைதளங்களில் வைரலான டிக்டாக் வீடியோவில் இருக்கும் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது. வேறொரு செய்தியை வைரல் வீடியோ உடன் இணைத்துள்ளனர் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader