திமுக ஜெயிக்கும் என்ற கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை என டைம்ஸ் நவ் மறுத்ததா ?

பரவிய செய்தி
திமுக ஜெயிக்கும் என்ற கருத்து கணிப்பை நாங்கள் வெளியிடவே இல்லை #TIMES_NOW குழும #இயக்குனர்_வினித்_ஜெயின் அவர்கள் மறுப்பு! இது போன்று தவறான தகவல்களை #திமுகவும்_சன்டிவியும் மீண்டும் மேற்கொண்டால் வழக்கு தொடரப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி சன் நியூஸ் வெளியிட்ட செய்திக்கு டைம்ஸ் நவ் குழுமத்தின் இயக்குனர் வினித் ஜெயின் மறுப்பு தெரிவித்து உள்ளதாக மீம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
மார்ச் 21-ம் தேதி சன் நியூஸ் செய்தியில், ” தமிழகத்தில் 177 இடங்களை வென்று திமுக கூட்டணி அமைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் என வெளியாகி இருக்கிறது.
டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் இப்படியொரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதா எனத் தேடுகையில், மார்ச் 24-ம் தேதி டைம்ஸ் நவ் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் இணைந்து மார்ச் 17 முதல் மார்ச் 22-ம் தேதி வரை 8,709 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில், திமுக 177 இடங்களிலும், அதிமுக 49 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக தலா 3 இடங்களும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்தி வெளியிட்ட கருத்துக் கணிப்பையே சன் நியூஸ் வெளியிட்டு இருக்கிறது. சன் நியூஸ் வெளியிட்ட செய்தியை டைம்ஸ் நவ் மறுத்ததாக எந்த செய்தியும் இல்லை.
இது தொடர்பாக டைம்ஸ் நவ் செய்தியின் துணை செய்தி ஆசிரியர் சபீர் அஹமத் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் கருத்துக் கணிப்பு எடுத்தது உண்மை. எங்களுடைய அதிகாரப்பூர்வ தளங்களில் நேற்று 7 மணிக்கு அதை வெளியிட்டு இருந்தோம். அதை பிற செய்திகளும் வெளியிட்டு இருக்கிறார்கள். சன் நியூஸ் மீது நாங்கள் வழக்கு தொடர போவதாக கூறுவது பொய் செய்தி ” என தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், டைம்ஸ் நவ் வெளியிட்டதாக போலியான கருத்துக் கணிப்பை சன் நியூஸ் வெளியிடவில்லை. டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பையே சன் நியூஸ் வெளியிட்டு உள்ளது. சன் நியூஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு செய்தியை டைம்ஸ் நவ் மறுத்ததாக கூறுவது தவறான தகவல் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.