பேரரசர் திப்பு சுல்தானால் நிறுவப்பட்ட கிணறா ?

பரவிய செய்தி
மைசூரின் பேரரசர் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட கிணற்றின் அரியப் புகைப்படம். எளிதாக கிணற்றின் அடிவரை செல்வதற்கு ஏதுவாக படிக்கற்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
புதிரான தோற்றம் கொண்ட இக்கிணறு போர்ச்சுகல் நாட்டில் அமைந்துள்ளது. கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கென இதனுள் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.
விளக்கம்
போர்ச்சுகல் நாட்டின் வரலாற்று சிறப்புமிகுந்த நகரான சின்ட்ராவில் உள்ள “ குயிண்டா டா ரேகலெய்ரா ” என்ற எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள இக்கிணறு பெரிதாகவும், புதிரான அமைப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது “Initiation Wells ” என்று அழைக்கப்படுகின்றது.
ஜான் லூகாஸ் என்பவர் இத்தகைய புதிரான கிணற்றை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். இக்கிணறானது, இருள் மற்றும் ஒளி, இறப்பு மற்றும் பிறப்பு ஆகியவற்றிற்கு இடையேயான பயணத்தை விளக்கும் வடிவமாகக் கருதப்படுகிறது.
இத்தகைய விசித்திரமான கிணறுக்குள், அப்பகுதியில் உள்ள பல இடங்களுக்கு செல்ல ஏதுவாக பல சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்த கிணறு தண்ணீரை சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல, எஸ்டேட்டில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்ல அமைக்கப்பட்ட பாதைகளை இணைக்கும் இடமாக உள்ளது. இதனுள் 27 மீட்டர்க்கு வளைவான படிக்கற்கள் அமைந்துள்ளன. படிக்கற்கள் மூலம் அடிவாரத்தை இணைக்கும் வேலைபாடானது பார்ப்பதற்கு மோதிரம் வடிவில் சென்றிருக்கும்.
இதற்கு “ முடிவடையாத கிணறு ” என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இத்தாலி நாட்டிலும் இக்கிணற்றின் தோற்றத்தை போன்று ஓர் கிணறு உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆக, போர்ச்சுகல் நாட்டில் உள்ள சுரங்கப்பாதை கிணற்றை மைசூர் அரசர் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட கிணறு என்று தவறானச் செய்திகளைபச் சிலர் வெளியிட்டுள்ளனர்.