திருச்செந்தூர் கோயிலில் ‘கந்த சஷ்டி கவசம்’ படிக்க தடை விதித்ததாகப் பொய் பரப்பும் நடிகர் ரவி !

பரவிய செய்தி
திருச்செந்தூர் கோயிலில் காலம் காலமாக படிக்கப்பட்டு வந்த “கந்த சஷ்டி கவசம்” தற்போது படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு. ஸ்டாலின் மகனும், திமுக அமைச்சருமான உதயநிதி இந்து சனாதனத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார்கள்..
மதிப்பீடு
விளக்கம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 13 அன்று தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும், கோவிலில் பத்து நாட்கள் தங்கியிருந்து விரதம் அனுசரித்து, சூரசம்காரம் நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்புவது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 14 அன்று IND TAMIL 24×7 என்ற யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள நடிகர் ரவி “இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நடக்கும் போது உட்பிரகாராத்தில் கந்த சஷ்டி கவசம் படிக்க தடை விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இது போன்ற சட்டத்தைப் போட தமிழ்நாடு அரசுக்கோ, சேகர் பாபுவுக்கோ, ஆணையருக்கோ எந்த அதிகாரமும் கிடையாது.” என்று பேசியுள்ளார்.
மேலும் அதில், “இந்து அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்து கொண்டே, இந்து அறநிலையத்துறையின் வலைத்தளப்பக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் சின்னத்தை எடுத்துவிட்டு, வேறு ஒரு லோகோவை வைத்துள்ளீர்கள்.” என்று அதில் பேசியிருந்ததையும் காண முடிந்தது.
இதனை பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
*திருச்செந்தூர் கோயிலில் காலம் காலமாக படிக்கப்பட்டு வந்த “கந்த சஷ்டி கவசம்” தற்போது படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.*
*ஸ்டாலின் மகனும், திமுக அமைச்சருமான உதயநிதி இந்து சனாதனத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். அதை முன்னிட்டு …… pic.twitter.com/R3NUoYK54t— JK Spk (@Jayakri53979107) November 16, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி கவசம் படிக்க தடை என்று கூறியதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து கடந்த நவம்பர் 06 அன்று திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த சேகர்பாபு, திருச்செந்தூர் திருவிழா ஏற்பாடுகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அதில், “திருச்செந்தூர் கோயிலில் நடந்துவரும் பணிகள் 35% நிறைவடைந்தன. அறநிலையத்துறை சார்பில் ரூ.99.50 கோடி மதிப்பில் 18 பணிகள் வரும் கார்த்திகை மாதம் தொடங்கப்பட உள்ளது. மேலும், பெருந்திட்ட பணிகளும், திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.” என்றும் அதில் தெரிவித்தார். மேலும், பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் “பக்தர்கள் உள்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்து பேசிய அவர், “கந்த சஷ்டிக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடைமுறைகள் தொடரும். நீதிமன்ற உத்தரவு இருக்கிறது.
கோவிலில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பொறுத்துக் கொண்டால், 2025-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடித்து வைக்கப்படும். மேலும், தற்போது நடந்து கொண்டிருக்கும் பணிகள் அடுத்த 50 ஆண்டிற்கு திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்குமான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரும். அதோடு, பக்தர்கள் விரதம் இருப்பதற்கு வசதியாக 21 இடங்களில் 30 ஆயிரம் பேர் தங்குவதற்கு தற்காலிக கொட்டகையும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது” என்றும் அதில் தெரிவித்துள்ளார். இதில் எந்த இடத்திலும் திருச்செந்தூர் கோயில் உள்பிரகாரத்தில் கந்த சஷ்டி கவசம் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறவில்லை.
கடந்த அக்டோபர் 2022-ல் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு வழங்கிய உத்தரவில், “கோயில் விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது. திருப்பதி கோயிலில் இதே போன்று உள்பிரகாரத்தில் சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் மட்டும் சத்திரமா? கடவுள் அனைவருக்கும் சமமானவர். உலகில் உள்ள முருகன் கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் மிகப் பிரசித்திப் பெற்றது.
கோயிலின் உள்ளே சென்று அமர்ந்தால் அனைத்தும் சரியாகி விடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும். திருச்செந்தூர், பழநி, மதுரை, ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதியில் உள்ளது போன்ற கட்டுபாட்டு நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும். இதனை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.” என்றும் அதில் கூறியிருந்தனர். இதன் மூலம் கடந்த 2022-ல் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரின் உட்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.
இதே போன்று இந்து அறநிலையத்துறையின் வலைத்தளப்பக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் சின்னத்தை எடுத்துவிட்டு, இஸ்லாமிய மதச் சின்னத்தை லோகோவாக வைத்துள்ளார்கள் என்று நடிகர் ரவி உட்பட பாஜகவினர் பலரும் தற்போது பரப்பி வருகின்றனர். இவையும் முற்றிலும் தவறான தகவல்கள்.
இது குறித்து இந்து சமய அறநிலைத்துறையின் இணையதளத்தில் உள்ள “திருக்கோயில்” எனும் இந்து சமய மாத இதழை ஆய்வு செய்து பார்த்தோம். இந்த திருக்கோயில் இதழ் என்பது 1958-ஆம் ஆண்டிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வெளியிடப்பட்டு வரும் ஒரு மாதாந்திர இதழாகும். இந்த இதழின் 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாத பதிப்பை பதிவிறக்கம் செய்து பார்த்ததில், அந்த இதழின் அட்டைப்படத்திலேயே இந்த இலச்சினை இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள 2020-2021 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பின் ஆவணத்திலும் இந்த இலச்சினை இடம் பெற்றிருந்தது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பௌத்த மதச்சின்னம் கொண்டு வந்ததாகப் பரப்பப்படும் பொய் !
இதற்கு முன்பும், இந்த இலச்சினை திமுக ஆட்சியில் தான் மாற்றப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் தவறாகப் பரப்பப்பட்டது. இது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி கவசம் படிக்க தடை விதித்துள்ளதாக நடிகர் ரவி உட்பட பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வரும் தகவல்கள் தவறானவை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.