திருச்செந்தூர் கோயிலில் திடீர் கட்டண உயர்வு எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நடக்கும் 7 நாட்களுக்கு தரிசனக் கட்டணங்கள் திடீர் உயர்வு…

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக நம்பப்படுகிற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அக்கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த (நவம்பர்) 13ம் தேதி தொடங்கியது. 

இந்நிலையில் ‘கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு  ரூ.100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2,000 ஆகவும், சாதாரண நாளில் ரூ.500 ஆகவும், விஷேச நாளில் ரூ.2,000 ஆகவும் இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3,000 ஆகவும், ரூ.100 ஆக இருந்த விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளதாக’ தினமலர், பாலிமர், ஈ டிவி, மின்னம்பலம் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதே தகவலை பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன ? 

திருச்செந்தூர் கோயில் கட்டணம் உயர்வு தொடர்பாக வெளியான செய்திகள் குறித்துத் தேடியதில், அது 2018ம் ஆண்டே உயர்த்தப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. 

இக்கோயில் கட்டண உயர்வு குறித்து 2018, ஆகஸ்ட் 17ம் தேதி விகடனில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், ‘இதுவரை அபிஷேக தரிசன கட்டணமாக ரூ.200ம், வி.ஐ.பி தரிசனக் கட்டணமாக ரூ.1,000மும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. திடீரென அபிஷேக தரிசனக் கட்டணம் ரூ.500 ஆகவும், வி.ஐ.பி தரிசனக் கட்டணம் ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மாதாந்திர வெள்ளிக்கிழமை ஆகிய விஷேச நாட்களில் மட்டும் அபிஷேக தரிசனக் கட்டணமாக ரூ.2,000-ம், வி.ஐ.பி அபிஷேக தரிசனக் கட்டணம் ரூ.10,000-மும்  உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, கடந்த மாதம் (2018, ஜூலை) 27-ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2018ல் செய்யப்பட்ட கட்டண உயர்வு பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கடிதத்தில் உள்ள விவரம்: 

  • அபிஷேக தரிசன கட்டணம் :

உயர்த்துவதற்கு முன் – சாதாரண மற்றும் திருவிழா விசேஷ தினம் ரூ.200.

உயர்த்தப்பட்ட பின் – சாதாரண தினம் ரூ.500, திருவிழா விசேஷ தினம் ரூ.2000.

  • கந்த சஷ்டி விழா – விஸ்வரூப தரிசன கட்டணம் : 

உயர்த்துவதற்கு முன் ரூ.500. உயர்த்தப்பட்ட பின் ரூ.2000.

  • கந்த சஷ்டி விழா – அபிஷேக கட்டணம் : 

உயர்த்துவதற்கு முன் ரூ.500. உயர்த்தப்பட்ட பின் ரூ.3000. 

இந்த கட்டணம்தான் 2018, ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்ததாக விகடன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து அக்கோயில் செயல் அலுவலர் அளித்த விளக்கத்திலும் மேற்கண்ட தகவலைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதில் ரூ.100 ஆக இருந்த விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தியது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஆணையர் உத்தரவில் தற்போது நடைமுறையில் உள்ள 100/- கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி 2023ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு மட்டும் விரைவு தரிசன கட்டணச்சீட்டாக எட்டு தினங்களுக்கு மட்டும் (12.11.2023 முதல் 19.11.2023 வரை) நபர் ஒன்றுக்கு ரூ.1000 நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தான் தனி தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்’ என்றுள்ளது. 

இதனைக் கொண்டு பார்க்கையில் இந்த ரூ.1000 கட்டணமானது 2023, நவம்பர் மாத அறிவிப்பின்படி 8 நாட்களுக்கு வசூலிக்கப்படுகிறது என்பதையும், மற்ற விழா கால கட்டணங்கள் 2018ம் ஆண்டு அறிவிப்புன்படி வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது. ஆனால், எப்போதும் போல இலவச தரிசனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகளின் தொகுப்பு !

இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரத்தை மறைத்து தமிழ்நாடு அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதாக பாஜகவினர் பரப்பும் தவறான தகவல் !

முடிவு :  

நம் தேடலில், திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன மற்றும் அபிஷேக கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல. அது 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்ட கட்டணமாகும். இது தொடர்பாக 2018ம் ஆண்டு விகடன் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளதையும் காண முடிகிறது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader