திருப்பதி கோயில் தங்கத்தை இஸ்லாமிய ஊழியர் திருடியதாகப் பரப்பப்படும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி
திருமலை ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசுவது என்ற பெயரில் பாலாஜியின் 100 கிலோ தங்கத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் முஸ்லீம் ஊழியர்களைப் பிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசாரிக்க கோரினர்.
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திரப் பிரதேசம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானக் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள திருப்பதி கோயில் உட்படப் பல கோயில்கள் இந்த தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. அப்படி இயங்கக் கூடிய கோயில்கள் சென்னையிலும் உள்ளது.
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ கோயில் விமான கோபுரத்தில் தங்கத் தகடு பதிக்கும் பணிக்காக சுமார் 100 கிலோ தங்கம் ஒதுக்கப்பட்டது. அதில் இஸ்லாமியப் பணியாளர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டதாகவும், அந்நபரை இந்து அமைப்புகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
Here u go.. why are they employing non Hindu in a Hindu temple?? Keep your secularism out of temple. https://t.co/4pavYYOAUH
— Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳 (@Devi_Uvacha) April 18, 2023
உண்மை என்ன ?
2021ம் ஆண்டு திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில் விமான கோபுரம், 100 கிலோ தங்கத்தால் கவசம் செய்யப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரிய தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி அறிவித்திருந்தார். இப்பணிகள் 2022ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் கால வரையறையின்றி ஒத்தி வைப்பதாக 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில் விமான கோபுரத்தில் தங்கக் கவசம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 100 கிலோ தங்கம் மாயமாகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்குற்றச்சாட்டு குறித்தும், பரவும் வீடியோ குறித்தும் மறுப்பு தெரிவித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி செயல் அலுவலர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
No sub-contract has been given to the said person. But in the madness of publicity and spreading enmity between religious groups, the false claim of gold scam is being peddled.@TTDevasthanams will take legal action against the people spreading this fake propaganda. 1/4 https://t.co/J11eHpO6g8 pic.twitter.com/SEMtih4uh1
— FactCheck.AP.Gov.in (@FactCheckAPGov) April 18, 2023
அவ்விளக்க வீடியோ ஆந்திரப் பிரதேச அரசின் அதிகாரப் பூர்வ Fact check டிவிட்டர் பக்கம் ட்வீட் செய்துள்ளது. அதில், தங்கக் கவசம் அமைப்பது தொடர்பாகத் துணை ஒப்பந்தம் எதுவும் வழங்கப்படவில்லை. சிலர் மதக் குழுக்களிடையே பகையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தங்க மோசடி நடைபெற்றுள்ளதாக ஒரு பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். பொய் பரப்புவோர் மீது தேவஸ்தானம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தங்க பணிகள் நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தங்கம் உள்ள அறைகளுக்கு உயர்ரக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் அனுபவம் வாய்ந்த திருமலை ஜீயர்களின் மேற்பார்வையிலும், பரிந்துரைகளின் படியுமே பணிகள் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Fact: A Muslim friend of the Gold Malam contactor Smt. Jyothi has come to give her the marriage invitation of his kin at the place where the workers engaged in Gold Malam works take rest, which is not located in the premises of Gold Malam Works. 4/4 pic.twitter.com/zy8jiw1kFO
— FactCheck.AP.Gov.in (@FactCheckAPGov) April 18, 2023
விமான கோபுரத்திற்குத் தங்கக் கவசம் பதிப்பதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஜோதி என்பவரின் விளக்க வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பணியாளர்கள் ஓய்வெடுக்கும் இடத்திற்குத் தனது இஸ்லாமிய நண்பர் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வந்தார். அவர் வந்த இடத்தில் எந்த தங்க வேலையும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இவற்றிலிருந்து திருப்பதி கோயில் கோபுரத்திற்கு தங்கக் கவசம் பதிக்கும் ஒப்பந்தம் ஜோதி என்னும் இந்து பெண்ணிடமே கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும், மோசடி மூலம் தங்கம் திருடப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் படிக்க : திருப்பதி மலையில் சர்ச் கட்டப்பட்டுள்ளதா ?| வைரலாகும் கட்டிடத்தின் உண்மை என்ன ?
மேலும் படிக்க : திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதா ?
இதற்கு முன்பாக திருப்பதி கோயிலை குறிப்பிட்டு பரப்பப்பட்ட வதந்திகளின் உண்மைத்தன்மை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், இஸ்லாமிய ஊழியர் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ கோயில் தங்கத்தை மோசடி செய்து திருடிவிட்டதாகப் பரப்பப்படும் குற்றச்சாட்டு உண்மை அல்ல. அப்படி எந்த மோசடியும் நடைபெறவில்லை எனத் திருப்பதி தேவஸ்தான தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.