This article is from Dec 30, 2021

திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதா ?

பரவிய செய்தி

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் எவ்வளவு தெரியுமா ??? 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள்.

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களின் ஒருவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் கைப்பற்றப்பட்டதாக மேடையில் தங்க நகைகள் அடிக்கி வைக்கப்பட்டு இருக்கும் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

சமீபத்தில் திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

வைரல் செய்யப்படும் வீடியோவில் அனைத்து தங்க நகைகளிலும் கடைகளில் விற்பனை செய்யும் போது இடம்பெறும் டக்குகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, வீடியோவின் பின்ணணியில் இருக்கும் அதிகாரிகள் தமிழில் பேசுவதையும் கேட்க முடிந்தது.

டிசம்பர் 15-ம் தேதி வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் துளையிட்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக காவல்துறை தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் 5 நாட்களில் கொள்ளையடிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் மீட்டதோடு, கொள்ளையனையும் கைது செய்தனர்.

அப்போது வேலூர் டி.ஐ.ஜி. பாபு மற்றும் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் மீட்கப்பட்ட நகைகள் உடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது குறித்து விளக்கமாக தெரியப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் கைப்பற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.

அந்த வீடியோ வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader