பாலியல் தொல்லை கொடுத்ததால் திருப்பத்தூர் பாஜக நிர்வாகி கொலை எனப் பரப்பப்படும் போலிச் செய்தி

பரவிய செய்தி

திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் மகளிரணி நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், மாநில தலைமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் விசாரணையில் தகவல் – தந்தி டிவி 

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் கலிகண்ணன் கடந்த 23 தேதி நள்ளிரவு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் அக்கட்சியில் மகளிர் அணி நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக மாநிலத் தலைமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது எனத் தந்தி டிவி நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

https://twitter.com/vijaykumartnj/status/1596192944499077121

உண்மை என்ன ?

இந்த நியூஸ் கார்டினை தந்தி டிவி வெளியிட்டதா என அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். பரவக்கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டில் 2022, நவம்பர் 25 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அத்தேதியில் கலிகண்ணன் கொலை குறித்து தந்தி டிவி எந்த நியூஸ் கார்டும் பதிவிடவில்லை. 

தந்தி டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் நவம்பர் 24ம் தேதி நியூஸ் கார்டு ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், “திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் கலிகண்ணன் ஊத்தங்கரையில் வெட்டி படுகொலை. ஆள்நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் கலிகண்ணனை வெட்டி சாய்த்த கும்பல் கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் விசாரணை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தினத்தந்தி இணையதளத்தில் நவம்பர் 25ம் தேதிதிருப்பத்தூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு – 6 பேர் கைது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. 

அச்செய்தியில், பாஜக துணைத் தலைவர் கலிகண்ணன் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். கொலை நடந்த இடத்திலிருந்த செல்போன் எண்களைக் கொண்டு கொலையாளிகளைக் காவல் துறையினர் தேடியுள்ளனர்.

இதனையடுத்து, ஓசூரில் பதுங்கியிருந்த கொலையாளிகள் 6 பேரைக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர் என்ற செய்தி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணதிற்காக கொலை செய்யப்பட்டது என அதில் குறிப்பிடப்படவில்லை.

நவம்பர் 24ம் தேதி வெளியான நியூஸ் கார்டில் தேதியை மாற்றியும், போலியான செய்தியை எடிட் செய்தும் தவறாகப் பரப்பி வருகிறார்கள். இதிலிருந்து சமூக வலைத்தளைன்களில் பரவும் தந்திடிவி நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், பாஜக நிர்வாகி கலிகண்ணன் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் படுகொலை செய்யப்பட்டதாகப் பரவும் தந்தி நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader