திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேனரை தமிழ் புறக்கணிப்பு எனத் தவறாக வெளியிட்ட ஜெயா நியூஸ் !

பரவிய செய்தி
திருப்பூர் மாவட்டம் உடுமலை முக்கோணம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் தமிழ் புறக்கணிப்பு – ஜெயா ப்ளஸ்
மதிப்பீடு
விளக்கம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் காவல் துறையினரால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு உள்ளதாகவும், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயா ப்ளஸ் சேனல் ஒரு நியூஸ் கார்டினை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் உடுமலைப்பேட்டை துணை ஆய்வாளர் (sub inspector) வரை காவல் துறை அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் உள்ளன.
இது தமிழ்நாடு தானா?
கொத்தடிமைகளே பதில் சொல்லுங்கடா…
பேனாசிலை அனுமதி கொடுத்ததுக்கு கைமாறா… pic.twitter.com/vYilplQhSy
— Gowri Sankar D (@GowriSankarD_) June 22, 2023
அந்த நியூஸ் கார்டினை அதிமுகவினர் பலரும் தங்களது சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில் ‘இது தமிழ்நாடு தானா?’ என்ற கேள்வியெழுப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியில் வைக்கப்பட்டதாகப் பரவும் அறிவிப்புப் பலகை குறித்து உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளரை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகையில், “அந்த அறிவிப்புப் பலகை வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய மார்ச் மாதத்தின் போது வைக்கப்பட்டது. அவர்களை யாரேனும் தாக்கினாலோ, மிரட்டினாலோ அதனை காவல் துறைக்குத் தெரிவிக்க ஏதுவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் துணை ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளின் எண்களை அந்த அறிவிப்புப் பலகையில் குறிப்பிட்டோம்.
அந்த அறிவிப்பு வெளிமாநில தொழிலாளர்களுக்கானது என்பதால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டு இருந்தோம். தற்போது பிரச்சனை ஏதும் இல்லை என்பதால் அவ்வறிவிப்புப் பலகை அகற்றப்பட்டு விட்டது. ” என விளக்கமளித்தார்.
வடமாநில தொழிலாளர்கள் உதவி எண் அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… https://t.co/GYRyKshiHo via @YouTube
— Tiruppur District Police (@tiruppursmc) March 4, 2023
மேற்கொண்டு இதுகுறித்து தேடியதில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வடமாநில தொழிலாளர்களுக்கான உதவி எண்களை 2023, மார்ச் 4ம் தேதி வெளியிட்டது தொடர்பான செய்திகளில் ‘0421-2970017’ எனும் தொலைபேசி எண் உள்ளது. அதே எண் ஜெயா ப்ளஸ் நியூஸ் கார்டிலும் இருப்பதைக் காண முடிகிறது.
இவற்றில் இருந்து இந்த அறிவிப்புப் பலகையானது கடந்த மார்ச் மாதம் வடஇந்தியத் தொழிலாளர்களுக்காக வைக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வடமாநில தொழிலாளர்களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாகப் போலிச் செய்தி !
வட மாநில தொழிளார்களுக்கு தமிழ் நாட்டில் பாதுகாப்பில்லை என பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் கொல்லப்படுவதாகப் பரவும் வேறு சில வதந்தி வீடியோக்கள் !
முடிவு :
நம் தேடலில், திருப்பூரில் இந்தியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதாகப் பரவும் பேனர் கடந்த மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்திகள் பரவிய போது, அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை. இதை வைத்து தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக தவறான செய்தியை ஜெயா நியூஸ் வெளியிட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.