உக்ரைன் மாணவர்களுக்கு ஸ்வட்டர் வாங்க மட்டும் ரூ3.25 கோடியை தமிழக அரசு செலவிட்டதா ?

பரவிய செய்தி

உக்ரைன் மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு ஒதுக்கிய 3.50 கோடி, இதில் ஸ்வட்டர் வாங்க மட்டும் 3.25 கோடி செலவாகியுள்ளதாம் !

Archive link

மதிப்பீடு

விளக்கம்

போர் சூழலால் உக்ரைன் நாட்டில் இருந்து மாணவர்களை மீட்கும் பணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ3.5 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகையில் மாணவர்களுக்கு ஸ்வட்டர் வாங்க மட்டும் 3.25 கோடியை அரசு செலவிட்டு உள்ளதாகக் கூறி ஆர்.டி.ஐ தகவலின் பக்கத்தை காண்பித்து வெளியான மீம் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை தமிழக பாஜகவின பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

உண்மை என்ன ? 

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க தமிழக அரசு செலவிட்ட தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு மே 23-ம் தேதி அளிக்கப்பட்ட பதிலின் முழுமையான ஆவணம் கிடைத்தது.

தமிழக அரசின் ஆர்.டி.ஐ பதிலில், ” உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க தமிழக அரசு ரூ3.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 3,25,29,234 ரூபாய் தமிழக அரசால் செலவிடப்பட்டு உள்ளது.

2022 பிப்ரவரி 27 முதல் மார்ச் 12-ம் தேதி வரையில், உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட விமான மற்றும் ரயில் டிக்கெட்களுக்கான செலவு, டெல்லியில் போக்குவரத்திற்கான ஏற்பாடுகள், டெல்லியில் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கான செலவுகள், உக்ரைன் மற்றும் ரோமானியாவில் உணவு மற்றும் போக்குவரத்திற்கான செலவுகள், மும்பையில் இருந்து விமான டிக்கெட்கள், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து மாணவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல வாகன ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு அறை செலவுகள், இதர செலவுகள் என  மொத்தம் 3,25,29,234 ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக ” கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க தமிழக அரசால் செலவிடப்பட்ட தொகை குறித்த ஆர்.டி.ஐ பதிலில் ஸ்வட்டர் வாங்கியதாக நேரடியாக ஏதும் குறிப்பிடவில்லை.

மாறாக, ” ஆர்.டி.ஐ பதிலில் அரசால் பண பரிமாற்றம் செய்யப்பட்ட நிறுவனங்களில் ஐரோப்பிய நாடுகளுக்காக ஸ்வட்டர் தயாரிக்கும் நிறுவனமான Serendip sourcing private limited  பெயர் இடம்பெற்று உள்ளது ஏன், இதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா ” என்று ஆர்.டி.ஐ தாக்கல் செய்த யுவராஜ் ராமலிங்கம் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

உக்ரைனில் இருந்து மாணவர்களுக்காக எந்தெந்த விசயத்திற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்கிற கேள்விக்கு எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்கிற தகவல் ஆர்.டி.ஐ பதிலில் இல்லை, மொத்தமாகவே தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

Serendip sourcing private limited  நிறுவனத்தின் இயக்குநர் திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உறவினர். ஆகையால், திமுகவைச் சேர்ந்தவரின் நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட்டது கேள்விக்குள்ளாகி வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், உக்ரைன் மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு ஒதுக்கிய ரூ3.50 கோடி, இதில் ஸ்வட்டர் வாங்க மட்டும் ரூ3.25 கோடி செலவாகியுள்ளது என ஆர்.டி.ஐ பதிலில் வெளியாகி உள்ளதாக பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader