திமுக ஆட்சியில் ஸ்லீப்பர் பஸ், குண்டு துளைக்காத பேருந்து எனத் தவறாகப் பரவும் பழைய படங்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் நிலையைப் பாருங்கள் என்று கூறி வயதான ஒருவர் பேருந்தின் ஒரு இருக்கையில் அமர்ந்து உடைந்த மற்றொரு இருக்கையில் கால் நீட்டி படுத்து உறங்குவதைப் போன்ற புகைப்படம் ஒன்றை அதிமுகவினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். மேலும் அப்பதிவுகளில் பலரும் தற்போதைய ஆட்சியை நையாண்டியாக கேலி செய்து பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.
டவுன் பஸ்ஸில் ஸ்லீப்பர் கோச் வசதி செஞ்சி தந்த விடியா அரசுக்கு நன்றி 🖤❤️ pic.twitter.com/aP4hiKUEx6
— Goutham ADMK🌱 (@suryaram9898) September 24, 2023
இதேபோன்று, திராவிட மாடல் ஆட்சியில் குண்டு துளைக்காத பேருந்தைப் பாருங்கள் என்று கூறியும் மற்றொரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குண்டு துளைக்காத திராவிட மாடல் பஸ் pic.twitter.com/InTBFNiV6Q
— 🌷மினி மோகன்🌷 (@Mini52614198) September 25, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2017ல் Masaal Vadai Memes என்ற முகநூல் பக்கத்தில் அப்போதைய அரசை விமர்சித்து இந்தப் புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் “அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள படுக்கை வசதியுடன் கூடிய கோச்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று கடந்த 2016ல் இதே புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிந்தது.
அடுத்ததாக, குண்டு துளைக்காத பேருந்தைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் புகைப்படத்தையும் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இந்த புகைப்படமும் கடந்த 2013ல் skyscrapercity எனும் இணையதளத்தில் பதிவாகி இருக்கிறது.
மேலும் படிக்க: அதிமுக ஆட்சியில் எடுத்த அரசு பேருந்து படத்தை தற்போது எடுக்கப்பட்டது போல் பதிவிட்ட சி.டி.நிர்மல் குமார் !
இதற்கு முன்பும் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட சாலைகளின் புகைப்படத்தை தற்போது எடுக்கப்பட்டது போல பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வந்தனர். அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் பேருந்தைப் பாருங்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் புகைப்படங்கள், கடந்த 2013 மற்றும் 2016 ஆகிய காலக்கட்டங்களில் அதிமுக ஆட்சியின் போதே பரவிய பழைய புகைப்படங்கள் என்பதை அறிய முடிகிறது.