6000 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கருவுற்றல் முதல் வயிற்றில் குழந்தை வளர்வது வரை சிற்பமாக உள்ளதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
தமிழ்நாடு, வரமூர்தீஸ்வரர் கோவில். 6000 வருடங்களுக்கு முன்னரே முன்னரே பெண் கருவுற்றல் முதல் வயிற்றில் பிள்ளை வளரும் விதத்தை துல்லியமாக கணித்து கல்லில் செதுக்கி வைத்துள்ளனர். இந்த சனாதனத்தை தான் சிலர் அழித்துவிட துடிக்கின்றனர்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் கோயிலில் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண் கருவுற்றல் முதல் வயிற்றில் பிள்ளை வளரும் விதத்தை துல்லியமாக கணித்து கல்லில் செதுக்கி வைத்துள்ளனர் எனக் கூறி இந்தியில் பேசும் வீடியோ ஒன்றை வலதுசாரி ஆதரவாளர் சரவணா பிரசாத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு, வரமூர்தீஸ்வரர் கோவில். 6000 வருடங்களுக்கு முன்னரே முன்னரே பெண் கருவுற்றல் முதல் வயிற்றில் பிள்ளை வளரும் விதத்தை துல்லியமாக கணித்து கல்லில் செதுக்கி வைத்துள்ளனர்.
இந்த சனாதனத்தை தான் சிலர் அழித்துவிட துடிக்கின்றனர். pic.twitter.com/mW2JI4oQQv
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) November 18, 2023
மேற்காணும் வீடியோவில், 1677ம் ஆண்டு ஆண்டனி வான் லீவென்ஹோக் என்பவரால் மைக்ரோஸ்கோப் மூலம் விந்தணுக்கள் கண்டறியப்பட்டது. ஆனால், 6000 ஆண்டுகளுக்கு முன்பே எந்தவித மைக்ரோஸ்கோப் கருவியும் இன்றி கருத்தரித்தல் குறித்த சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறியுள்ளனர்.
உண்மை என்ன ?
கடந்த 2018ம் ஆண்டே, ” இன்று Microscope மூலம் கண்டுபிடித்த Fertilization எனப்படும் ஆணின் விந்தணு கருவை துளைக்கும் காட்சியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோவிலில் செதுக்கிருக்கின்றனர் தமிழர்கள் ” எனப் பரப்பப்பட்ட தகவல் தவறானது என யூடர்னில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : விந்தணு கருவை துளைக்கும் சிற்பம்: தமிழர்கள் செதுக்கியதா ?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவின் அரியத்துறை பகுதியில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலின் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் பாம்பு, மீன், பல்லி உள்ளிட்டவையின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், நிலவை பாம்பு விழுங்குவது போன்றும், சிவ லிங்கத்தை பாம்பு நெருங்குவது போன்றும் உள்ள சிற்பத்தையும், இரு மீன்கள் நெருங்கும் சிற்பத்தையும் ஆணின் விந்தணு கருவை துளைக்கும் காட்சி எனத் தவறான தகவலை பரப்பி உள்ளனர்.
அடுத்ததாக, கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் சிற்பம் குறித்து தேடுகையில், அது கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளதைக் காண முடிந்தது. இக்கோயில் சோழ அரசர் இரண்டாம் ராஜராஜனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அடுத்ததாக, கர்ப்பபைக்குள் குழந்தை இருப்பது போன்று கான்பிக்கப்பட்டு இருக்கும் சிற்பம் குறித்து தேடுகையில், அச்சிற்பம் திருப்பூர் அருகே உள்ள குண்டடம் வடுகநாதர் பைரவர் கோயிலில் அமைந்துள்ளதை அறிய முடிந்தது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் போன்று கோயிலின் தூணில் உள்ள சிற்பத்தை குறித்து மேற்கொண்டு தேடுகையில், தூணின் நான்கு புறத்திலும் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களின் புகைப்படங்கள் சில கிடைத்தன. அதில், ஓ என்ற எழுத்திற்குள் குழந்தை இடம்பெற்றுள்ளது. இது “ஓம்” என்பதைக் குறிக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் எழுத்துக்களின் வடிவம் வேறாக இருந்தன. ஆனால், மேற்காணும் சிற்பத்தில் உள்ள ஓ என்ற எழுத்தின் வடிவம் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளது போன்று கூர்மையாக இருப்பதை காணலாம்.
நவீன தமிழ் எழுத்தின் பரிணாம பகுப்பாய்வு தொடர்பாக வெளியான ஆய்வுக் கட்டுரையில், 20 நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள சீர்த்திருத்தங்கள் குறித்தும், உதாரணத்திற்கு, தற்காலத்தில் எழுதப்படும் “வணக்கம் “ என்ற வார்த்தை பிராமி மற்றும் வட்டெழுத்தில் எப்படி இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். இதன் அடிப்படையில், வைரலாகும் குழந்தை சிற்பம் பழமையானதாக இருக்க வாய்ப்பு இல்லை.
மேலும் படிக்க : சைக்கிளை கண்டுபிடித்தது தமிழனா ? கல்வெட்டு ஆதாரம் நம்பலாமா ?
மேலும் படிக்க : 8-ம் நூற்றாண்டு வராகா சிற்பத்தில் உலக உருண்டை வடிக்கப்பட்டதா ?
இதற்கு முன்பாகவும், கோயில் சிலைகளை வைத்து பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன. அவை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டின் வரமூர்த்தீஸ்வரர் கோயிலில் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண் கருவுற்றல் முதல் வயிற்றில் பிள்ளை வளரும் விதத்தை துல்லியமாக கணித்து கல்லில் செதுக்கி வைத்துள்ளனர் எனப் பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.