மக்கள் நகைகளை அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் கேட்டுக் கொண்டாரா ?

பரவிய செய்தி
தேசநலன் கருதி தமிழக மக்கள் அனைவரும் தம்மிடம் இருக்கும் தங்கநகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – தமிழக பாஜக தலைவர் முருகன்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர் கொள்ள மக்களிடம் இருந்து நிவாரண நிதி பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ” தேசிய நலன் கருதி மக்கள் அனைவரும் தங்களின் தங்க நகைகளை அரசிடம் அளிக்குமாறு ” கூறியதாக தந்திடிவி செய்தியின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மக்களிடம் நிவாரணம் நிதி கேட்பதற்கும், மக்களிடம் உள்ள செல்வத்தை மொத்தமாக கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் தலைவர் இதுபோன்று கேட்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.
ஆகையால், பாஜக தலைவர் எல் முருகன் அளித்த பேட்டி குறித்து தந்திடிவி செய்தியின் முகநூல் பக்கத்தில் தேடிய பொழுது ஏப்ரல் 6-ம் தேதி வெளியான செய்தி கிடைத்தது. அதில், ” பிரதமர் மோடியின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 நாட்கள் ரூ.100 அனுப்புமாறு பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் ” என எல்.முருகன் அளித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் தங்களின் கட்சி நிர்வாகிகள் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணம் அளிக்குமாறு கூறியதாக வெளியான செய்தியின் கார்டை போட்டோஷாப் செய்து மாற்றி அரசியல் சார்ந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பும், அச்சமும் இருக்கும் நேரத்தில் மதம், அரசியல் சார்ந்த வன்மங்களை போலிச் செய்திகளின் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.