தமிழக பாஜக தலைவரை எஸ்.வி.சேகர் இழிவுபடுத்தியதாக ஃபோட்டோஷாப் ட்விட்டர் !

பரவிய செய்தி
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக பதிவிடப்பட்ட கருத்துக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழிசை செளந்தர்ராஜனுக்கு பிறகு வெற்றிடமாக இருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு எல்.முருகன் என்பவர் நியமிக்கப்பட்டார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரை மாநில தலைவராக நியமிக்கப்பட்டது பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில், தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவருக்கு அளித்ததற்கு எதிராக எஸ்.வி.சேகர் மற்றும் பானு கோம்ஸ் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் என இரு ஸ்க்ரீன்ஷார்ட்கள் பரப்பப்பட்டு வருகிறது.
பானு கோம்ஸ் உடைய பெயரில் இருக்கும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் எழுத்து பிழைகள் இருப்பதை காணலாம். இதையடுத்து தன்னுடைய பெயரில் பரவும் ஸ்க்ரீன்ஷார்ட் போலியானது என பானு கோம்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
” என் பெயரில் இப்படி போட்டோஷாப் பொய் செய்தி தயாரிக்கப்பட்டு உலவுகிறது. இதை எனக்கு கவனப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. என்னுடைய பதிவு எந்த செய்தியை பார்த்தாலும்… அது உண்மை தானா என்று இப்பக்கத்தில் வந்து பார்த்து உறுதி செய்து கொள்ளவும். இது மட்டுமே என்னுடைய facebook பக்கம் ” எனப் பதிவிட்டு உள்ளார்.
” கன்னக்கோல் கொள்ளைக்காரர்கள் எல்லாம் தேசியக் கட்சியின் மாநில தலைமைப் பொறுப்பிலா ? இந்து மதத்தை திறந்துவிட்டது போதாதா ? கட்சியும் சூத்திரர்களின் கடை சுரக்கா ? ” என எஸ்.வி சேகர் ட்விட்டரில் பதிவிட்டதாக உலாவும் ஸ்க்ரீன்ஷார்ட் குறித்து அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடிய பொழுது அவ்வாறான பதிவுகள் ஏதுமில்லை.
.@JPNadda BEST CHOICE. CONGRATULATIONS pic.twitter.com/uat2SSTfwQ
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) March 11, 2020
மார்ச் 11-ம் தேதி எஸ்.வி.சேகர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட செய்தியை பகிர்ந்தும், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை டக் செய்து சிறந்த முடிவு, வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டது தொடர்பாக பானு கோம்ஸ் மற்றும் எஸ்.வி.சேகர் பெயரில் போட்டோஷாப் மூலம் எடிட் செய்த ஸ்க்ரீன்ஷார்ட்களை பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.