தமிழக பட்ஜெட்டை வைகோ விமர்சித்ததாக பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
மோடி அரசின் ஜல் ஜீவன் திட்டம், சுகன்யா திட்டம், அபியான் போஷான் திட்டம், ஆவாஸ் போஜனா திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழில் பெயர் சூட்டும் விழா மட்டுமே இன்று நடைபெற்றுள்ளது. வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ !
மதிப்பீடு
விளக்கம்
2022-2023 நிதியாண்டிற்கான தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் அறிக்கை மோடி அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் மட்டுமே சூட்டி உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எம்.பியுமான வைகோ விமர்சித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டை தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களும், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர்.
உண்மை என்ன ?
திமுகவின் கூட்டணிக் கட்சி எம்.பியான வைகோ தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்ததாக பாஜகவினர் பரப்பும் நியூஸ் கார்டில், ” வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது என்பதற்கு பதிலாக “அறிவிக்கப்பட்டது ” என பிழையுடன் எடிட் செய்து இருக்கிறார்கள்.
தமிழக பட்ஜெட் குறித்து வைகோ அவர்கள், ” சமூகநீதியை நிலைநாட்டும் பட்ஜெட். தமிழ் வளர்ச்சிக்கு முதன்மையான இடம் அளித்து, அகரமுதலி திட்டத்திற்குர் ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு குறித்த அறிவிப்பு செந்தேனாய் இனிக்கிறது ” எனக் கருத்து தெரிவித்ததாக தந்திடிவி நியூஸ் கார்டு வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழக அரசின் பட்ஜெட் மோடி அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் சூட்டும் விழா மட்டுமே என வைகோ விமர்சித்ததாக பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.