திமுக ஆட்சியில் தமிழ்நாடு கல்விக் குறியீட்டில் பின்தங்கியதாக முந்தைய ஆட்சி தரவைப் பரப்பும் அதிமுகவினர் !

பரவிய செய்தி

ரசிகர் மன்ற தலைவருக்குக் கல்வி அமைச்சர் பதவி கொடுத்ததற்கு கைமேல் பலன்.

மதிப்பீடு

விளக்கம்

கல்வி குறியீட்டில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது என்ற கட்டுரை ஒன்றினை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் இந்திராணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ரசிகர் மன்ற தலைவருக்குக் கல்வி அமைச்சர்(அன்பில் மகேஷ்) பதவி கொடுத்ததற்கான பலன் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/IndiraniSudala1/status/1588797359911481344?t=PR-vKyc6sOtGlaFSewGBVg&s=08

Archive twitter link 

Archive twitter link

உண்மை என்ன ?

தமிழ்நாடு கல்வி குறியீட்டில் பின் தங்கியதாகப் பகிரப்படும் கட்டுரையில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மேலும் அதில், 2020-21க்கான தரவுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தது அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி. 

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் PERFORMANCE GRADING INDEX (PGI) என்ற தலைப்பில் புள்ளி விவரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 2020-21ம் ஆண்டில் இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 5 பிரிவுகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக 1000 மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 855 மதிப்பெண்களைப் பெற்று தமிழ்நாடு 3வது தரநிலையில் உள்ளது. 

புள்ளி விவரத்தில் என்ன உள்ளது ?

வெளியிடப்பட்ட புள்ளி விவர தரவின்படி தமிழ்நாடு கடந்த 2017-18ல் 774 மதிப்பெண்ணும், 2018-19ல் 791 மதிப்பெண்களும் பெற்று தரநிலை வரிசையில் 3வது இடத்திலிருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டான 2019-20ல் 906 மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருந்தது. தற்போது 2020-21ம் ஆண்டுக்கான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் தமிழ்நாடு 855 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டினை காட்டிலும் 51 மதிப்பெண்களைக் குறைவாகப் பெற்றுள்ளது. மேலும் தரவரிசையில் 2வது இடத்திலிருந்து 3வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

இப்புள்ளி விவரத்தில் Learning Outcomes and Quality என்ற தலைப்பில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணித பாடத்தில் அவர்களது சராசரி மதிப்பெண் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தலைப்புக்கு ஒட்டுமொத்தமாக நிர்ணயிக்கப்பட்ட 180 மதிப்பெண்ணில் தமிழ்நாடு பள்ளிகள் 132 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இம்மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் இல்லை.

இதே போல், Infrastructure and Facilities என்ற தலைப்பில் 5ம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்குக் கணினி உதவியுடன் கற்பித்தல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வுக் கூடம் வசதி முதலான வசதிகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 150க்கு 131 மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இது கடந்தை ஆண்டை காட்டிலும் (2019-20) 11 மதிப்பெண்கள் குறைவாகும்.

அடுத்ததாக, Equity என்ற தலைப்பில் தமிழ்நாடு பெருமளவில் பின்னடைவு சந்தித்துள்ளது. இந்த பிரிவானது மொழிப் பாடம் மற்றும் கணிதத்தில் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் பொதுப் பிரிவு மாணவர்களைக் காட்டிலும் எந்த அளவில் முன்னேறி உள்ளனர் என்பதைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதில், 2019-20ம் ஆண்டில் 219 மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு 2020-21ம் ஆண்டில் 183 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது. சரியாக 36 மதிப்பெண்கள் குறைந்துள்ளது.

இந்த தரவினை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்த தமிழ்நாடு அரசு எத்தகைய பணியினை மேற்கொள்ளப் போகிறது. அந்த முயற்சிகளுக்கான பலன் என்ன என்பதினை அடுத்த ஆண்டு ஒன்றிய அரசு வெளியிடும் தரவினை கொண்டே அறிய முடியும். 

உண்மை இவ்வாறாக இருக்க, கட்டுரை எந்த காலக்கட்ட தரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது என்ற அடிப்படையினை கூட பார்க்காமல் எடப்பாடி ஆதரவாளர்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர். 

முடிவு : 

நம் தேடலில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு கல்வியின் தரம் குறைந்துள்ளதாகப் பரப்பப்படுவது உண்மையல்ல. அத்தரவுகள் 2020-21ம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், கல்வி அமைச்சராக செங்கோட்டையனும் இருந்துள்ளனர் என அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader