கரண்டு கம்பி மீது துணியை உலர்த்தும் நபர்.. உ.பி படத்தை தமிழ்நாடு எனப் பதிவிட்ட பாஜக பொருளாளர் !

பரவிய செய்தி
திருட்டு திமுக ஆட்சியில் கரண்டு கம்பி மீது துணி உலர்த்த இந்த தம்பிக்கு நம்பிக்கை கொடுத்ததே அணில் மந்திரி தான்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக ஆளும் திமுக அரசு மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. அதேநேரத்தில், நாட்டில் பல மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருவதாக பல்வேறு செய்திகளும் வெளியாகி வந்தன.
இந்நிலையில், திமுக ஆட்சியில் கரண்டு கம்பியின் மீது துணியை உலர்த்துவதாக தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
உண்மை என்ன ?
எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” உத்தரப்பிரதேசத்தின் ராம் வாடிகா பார்க் பகுதி என காண்பித்தது. மேற்கொண்டு அதன் முடிவுகளை பார்கையில், 2017-ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான கேளிக்கையான புகைப்படங்களின் தொகுப்பில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் இல்லை.
மேற்கொண்டு தேடுகையில், 2015 ஜூன் 5-ம் தேதி india.com எனும் இணையதளத்தில் ” உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின் கீழ் மக்கள் மின்கம்பிகளில் துணிகளை உலர்த்துவதாக ” இப்புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தனர்.
இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மின் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மின் கம்பிகளை மக்கள் துணியை உலர்த்தப் பயன்படுத்துவதாக 2018-ல் செய்திகளில் வேறு சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக மக்கள் மின்கம்பிகளில் துணிகளை உலர்த்துவதாக புகைப்படங்கள் பல இணையத்தில் உள்ளன.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் கரண்டு கம்பி மீது துணிகளை உலர்த்துவதாக பாஜக பொருளாளர் பதிவிட்ட புகைப்படம் தவறானது. அது தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல. இப்புகைப்படம் 7 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைக் குறிப்பிட்டு வெளியாகி இருக்கிறது என அறிய முடிகிறது.