தமிழ்நாட்டில் குடிமக்கள், கோவில்களுக்கு மட்டும் ஒரு யூனிட் மின்சாரம் 7.85ரூ எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் மின் கட்டணம் சாதாரண குடிமகன்: ஒரு யூனிட் ரூ.7.85 பள்ளிவாசல்: ஒரு யூனிட் ரூ.1.85 தேவாலயம்: ஒரு யூனிட் ரூ.1.85 இந்துக் கோவில்: ஒரு யூனிட் ரூ.7.85. இதுதான் திராவிட மாடல் . 

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாதாரண குடிமக்களுக்கும் , இந்து கோவில்களுக்கும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ7.85-க்கும், அதே தேவாலயம் மற்றும் பள்ளி வாசலுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ1.85-க்கும் வழங்குவதாக ஃபார்வர்டு தகவல் ஒன்றை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?   

கடந்த 2019ம் ஆண்டே கோயில்களுக்கு மின் கட்டணம் 1 யூனிட்க்கு ரூ8 , சர்ச் மற்றும் மசூதிகளில் 1 யூனிட்க்கு ரூ.2.85 என பரப்பப்பட்ட வதந்தி குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 , சர்ச் மசூதிக்கு ரூ.2.85 என பாகுபாடா ?

இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்கள், பள்ளிவாசல், சர்ச் என அனைத்து பொது வழிபாட்டுத் தலங்களுக்கும் 0 முதல் 120 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு ஒரு யூனிட் 2.85 ரூபாய், இதில், 120 யூனிட்களுக்கு மேல் சென்றால் மானியம் இன்றி ஒரு யூனிட்க்கு 5.75 ரூபாய் என்ற கணக்கிலேயே கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் எனத் தெரிவித்து இருந்தோம்.

மேலும் படிக்க : கோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.

பின்னர் 2020-ல் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இல்லாத தனியார் கோவில்களுக்கு 0 முதல் 100 யூனிட் வரை ரூ.5.00, 100 யூனிட்க்கு மேல் ரூ.8.05 என ஆர்.டி.ஐ தகவலில் வெளியானது சர்சையாகியது. அது வணிக ரீதியில் இணைப்பை பெற்ற அனைத்து மத தனியார் வழிபாட்டுத்தலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் என்றும், அதேபோல் அனைத்து பொது வழிபாட்டுத் தலங்களுக்கும் ஒரு யூனிட் 2.85 ரூபாய் என்றும் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

2017-ம் ஆண்டு TNERC-ன் ” Revised Tariff rates with effect from 11.08.2017 Approved rate and payable by the Consumer ” என வெளியிட்ட அறிவிப்பின் படி, வீடுகளுக்கான மின்சார பயன்பாட்டில் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 200  யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு ரூ.1.50 ஆக உள்ளது.

எனினும், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : தமிழகத்தில் உயர்கிறது மின்கட்டணம்.. எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் ?

புதிய கட்டண விதிபுப்படி, 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கூடுதலாக ரூ.55 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதன்படி பார்த்தாலும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு ரூ.2.05 என்ற தொகையே வரும். ஆனால், குடிமக்களுக்கும், கோவில்களுக்கும் மட்டும் ஒரு யூனிட் 7.85ரூபாய் விதிக்கப்பட்டு உள்ளதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் பள்ளிவாசல் ஒரு யூனிட் ரூ.1.85, தேவாலயம் ஒரு யூனிட் ரூ.1.85, சாதாரண குடிமகன்கள் மற்றும் இந்துக் கோவில்களுக்கு ஒரு யூனிட் ரூ.7.85 என விதிக்கப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader