This article is from Feb 28, 2020

தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பயன் என்ன ?

பரவிய செய்தி

உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் நீங்களும் ரூ.50 ஆயிரம் பெறலாம்…

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் ஏழை எளிய பெண்களின் கல்வி, திருமணம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ஓர் குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டு, அப்பெண் குழந்தை குறிப்பிட்ட வயதினை அடைந்த பிறகு முதிர்வு தொகை ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

1992-ம் ஆண்டு தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. முதலில் பெண் குழந்தைகளுக்கு 1,500 ரூபாய்க்கு வைப்பு தொகைக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001-ம் ஆண்டில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் தொகை ஆனது ஓர் பெண் குழந்தைக்கு 22 ஆயிரம் எனவும், இரண்டு பெண் குழந்தைகள் எனில் 15 ஆயிரம் வீதம் உயர்த்தப்பட்டது.

2011-ம் ஆண்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வந்த தொகை மீண்டும் உயர்த்தப்பட்டது. மேலும், பதிவு செய்யப்பட்ட பெண்கள் முதிர்வு தொகையை பயன்பெறும் வயது 20-ல் இருந்து 18 வயதாக குறைக்கப்பட்டது.

” பெண் குழந்தை 1.8.2011 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்து இருந்தால் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000 வைக்கப்படும். 1.8.2011-க்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25,000 வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000 வைக்கப்படும் “.

இத்தொகையானது தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்படும் பெண் குழந்தையின் பெயரில் அந்நிறுவனத்தின் மூலம் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைப்புத் தொகையானது ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் சேர்த்த முதிர்வு தொகை காசோலையாக வழங்கப்படும்.

விண்ணப்பித்தல் & விதிமுறைகள் : 

இந்த திட்டத்திற்கு பொது சேவை மையத்திலும் விண்ணப்பிக்க முடியும். உங்களின் விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டு இருக்கும் விவரங்கள், சான்றுகள் உள்ளிட்டவை மாவட்ட சமூக நல அலுவலரால் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதியான விண்ணப்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆண்டு வருமானம் ரூ.24,000 முதல் 72,000-க்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோர்களில் ஒருவர் 35 வயதுக்குள் அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்றிதழையும் அளிக்க வேண்டும்.

திட்டத்தின் பயனைப்பெற அப்பெண் குழந்தை 10-ம் வகுப்பு தேர்வையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் முதிர்வு தொகை அப்பெண் குழந்தையின் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் தாக்கத்தால் 2001-ம் ஆண்டில் 64.55% ஆக இருந்த பெண்களின் படிப்பறிவு 2011-ம் ஆண்டில் 73.44% ஆக உயர்ந்து இருப்பதாகவும், பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தமிழக அரசு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கும் திட்டம். 2019-ல் வெளியான செய்தியில் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 3,257 பெண் குழந்தைகளுக்கு ரூ.16.24 கோடி வைப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. வறுமையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் 18 வயது அடைந்த பிறகு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader