‘சொந்த கார்களை வாடகை டாக்சியாக ஆக்கலாம்’, அரசு அனுமதி என தவறான தலைப்பிட்ட மாலைமலர் !

பரவிய செய்தி
உங்கள் சொந்த கார்களை “வாடகை டாக்சி” ஆக்கலாம், தமிழக அரசு அனுமதி – மாலை மலர்
மதிப்பீடு
விளக்கம்
சமீபகாலமாகவே அரசின் அனுமதியின்றி பலரும் தங்களது சொந்த வாகனங்களை வருமானத்திற்காக வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதனால் அரசின் அனுமதி பெற்று வாடகைக்கு கார் மற்றும் வேன் ஓட்டும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உங்களது சொந்த கார்களை வாடகை டாக்சியாக பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது என்று கூறி ‘மாலை மலர் தமிழ்‘ நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : https://t.co/SgQVl49r8K#cars #tngovt #news #mmnews #Maalaimalar pic.twitter.com/7AtTpExWVb
— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 18, 2023
மேலும் இது குறித்து ‘மாலைமலர் தமிழ்’ தன்னுடைய வலைத்தளப் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது. ஆனால், அந்த கட்டுரையை நீக்கி உள்ளனர்.
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட வகை வாகனங்கள் மட்டுமே சுற்றுலா மற்றும் வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அனைத்து வகை வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற ஓட்டுநர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அடுத்து, நேற்று (நவம்பர் 17) தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சொகுசு கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என்று வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இந்த அறிவிப்பில் மாலை மலர் குறிப்பிட்டுள்ளது போல சொந்த கார்களை வாடகைக்காக பயன்படுத்தலாம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. மேலும் அரசு அனுமதியின்றி சொந்த வாகனங்களை வாடகைக்காக பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால் பொது போக்குவரத்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதொடு, அரசுக்கும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
மேலும் படிக்க: காசா மக்களுக்குத் தண்ணீர், உணவு கொண்டு செல்லும் எகிப்தியர்கள் எனப் பழைய வீடியோவை பதிவிட்ட மாலை மலர் !
இதற்கு முன்பும், ‘மாலை மலர்’ வெளியிட்ட பல தவறான செய்திகளை ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாக வதந்தி பரப்பிய மாலைமலர் !
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்.. திரித்து வெளியிட்ட ஊடகங்கள்.. உண்மையான எண்ணிக்கை இதோ !
முடிவு:
நம் தேடலில், சொந்த கார்களை வாடகை டாக்சியாக பயன்படுத்தலாம் என்று ‘மாலை மலர் தமிழ்’ வெளியிட்டுள்ள நியூஸ் கார்டு தவறானது என்பதை அறிய முடிகிறது.