Fact Checkஅரசியல்தமிழ்நாடு

நடக்காத மருத்துவர் தேர்வை நடந்ததாக தவறான தகவலை பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

பரவிய செய்தி

1021 மருத்துவர்களுக்கான பணி நியமன வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இடையில் மதுரை உயர் நீதி மன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். அதுவும் இப்போது சரியாகி விட்டது. அந்த 1021 பணியிடங்களுக்கு 25,000 மருத்துவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். அதில் 1021 பேரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அவர்களுக்கான பணி ஆணைகளும் வழங்கப்பட இருக்கிறது. – மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்)

Youtube link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் வரும் பிப்ரவரி மாதம் மருத்துவத் துறையில் புதியதாக பணிநியமன ஆணை வழங்க உள்ள தகவல்களை அளித்திருந்தார்.

Advertisement

அப்போது செய்தியாளர் ஒருவர், “அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப மருத்துவர் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“4308 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவு வாரியாக பணிநியமனம் செய்யப்பட்டு வருகிறது”என சில தகவல்களை அமைச்சர் குறிப்பிடுகிறார்.

அதன் பிறகு, 1021 மருத்துவர் பணிநியமனத்திற்கான தேர்வு நடந்து விட்டதாகவும், அத்தேர்வினை எழுதிய 25,000 மருத்துவர்களிலிருந்து 1021 பேர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் கூறுகிறார்.

உண்மை என்ன ? 

அமைச்சர் கூறிய 1021 மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இணையத்தில் தேடிய , தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம் தேதி அசிஸ்டென்ட் சர்ஜன் (Assistant Surgeon) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதியாக இளநிலை மருத்துவ படிப்பு (MBBS) குறிப்பிடப்பட்டுள்ளது. 

இத்தேர்வில் தேர்ச்சி அடைய முதலில் தமிழ் பாடத் தேர்வில் குறைந்த பட்சம் (10ம் வகுப்பு நிலையில்) 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் கட்டாயம் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவையடுத்தே, தமிழ் கட்டாயத் தேர்ச்சி என்பது இவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கட்டாயத் தமிழ் தேர்ச்சி என்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2022, அக்டோபர் 17ம் தேதி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 28ம் தேதி தேர்வு நடைபெறும் நாள் குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. 

அதில் 2022 டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு அமர்வுகள் (sessions) வீதம், மொத்தம் 4 அமர்வுகள் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 2022 டிசம்பர் 1ம் தேதி இவ்வழக்கினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் எனக் காரணம் காட்டி கடந்த டிசம்பர் 5ம் தேதி தேர்வினை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்தேர்வு நடத்துவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், தேர்வு நடந்து விட்டதாகவும், 25,000 பேர் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் தவறான தகவலைப் கூறியுள்ளார். 

இது குறித்து தொலைப்பேசி வாயிலாகத் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தைத் தொடர்பு கொண்டு யூடர்ன்’ பேசிய போது, அமைச்சர் கூறியது தொடர்பாக, ‘தேர்வு எப்போது நடத்தப்பட்டது ? அறிவிப்பு எப்போது வெளியிடப்பட்டது ?’ என்ற கேள்விகளை எழுப்பினோம். அதற்கு தேர்வு தொடர்பான அறிவிப்புகளை தங்களின் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, பதில் அளிக்க மறுத்துவிட்டனர். 

மாவட்ட வாரியாக பணி நியமனம் : 

இதனிடையே பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து மாவட்ட நலவாழ்வு துறை சார்பாக சில மாவட்டங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் நிலை -2, மருத்துவமனை பணியாளர் போன்ற பணிகள் அதில் உள்ளன. 

இந்த தற்காலிக பணிநியமனம் குறித்து பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் சேகர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ‘1021 அசிஸ்டென்ட் சர்ஜன் பணிக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த தற்காலிக பணிநியமனம் நடைபெறுகிறதா’ எனக் கேட்டோம். “அப்படி கிடையாது. அது வேறு, இது வேறு. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் அத்தற்காலிக பணிநியமனம் நடைபெறுகிறது” எனக் கூறினார். 

முடிவு : 

நம் தேடலில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 1021 மருத்துவர் பணியாளர் தேர்வு நடைபெற்று விட்டது. அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகக் கூறியது தவறான தகவல்.

கடந்த டிசம்பர் 5ம் தேதி அத்தேர்வினை ஒத்தி வைப்பதாகத் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு அத்தேர்வு நடத்தப்படவில்லை என்பதை  அறிந்து கொள்ள முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button