தமிழக அரசு பள்ளியில் மதமாற்றம் எனப் பரப்பப்படும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதமாறக் கட்டாயப்படுத்தியதே காரணமென தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது பேசிய பிற வீடியோவும் வெளியாகி பாஜகவினர் மீது சந்தேகங்களையும், கண்டனங்களையும் உருவாக்கியது.
இந்நிலையில், தமிழக அரசு பள்ளியில் மதமாற்றம் நிகழ்வதாக 45 நொடிகள் மற்றும் 7 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் மதமாற்றம்? pic.twitter.com/92CHvoePbq
— I am Modi 🔥🔥🔥 (@W667DAf8eiSdq8L) January 27, 2022
வைரல் செய்யப்படும் வீடியோவில், பள்ளி வளாகத்தில் கூடியிருக்கும் மாணவிகளின் தலையில் கையை வைத்து ஜெபிப்பது போலவும், மாணவிகள் மயங்கி விழுவது போன்ற காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் ஆசிரியர்களுக்கும் அவ்வாறே செய்கிறார்கள். அடுத்து, கிறிஸ்தவ மதம் சார்ந்த வாசகங்களை கூற ஒருவர் அதை மொழிப்பெயர்க்கும் பின்னணி குரலும் கேட்கிறது.
உண்மை என்ன ?
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் சமீபத்தில் தமிழக அரசு பள்ளியில் இவ்வாறான நிகழ்ச்சிகள் நிகழ்ந்து இருக்க வாய்ப்பில்லை. வீடியோவும் பார்ப்பதற்கு பழைய வீடியோ போன்றே தெரிகிறது.
ஆகையால், வைரல் செய்யப்படும் வீடியோவை Invid We verify மூலம் கீப்ரேம்களாக பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2019-ல் ஷேர் சாட் தளத்தில் ” St.Joseph, Nagercoil ” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்கள்.
இதை வைத்து தேடிப்பார்க்கையில், ” 2013-ம் ஆண்டு e kuruvi எனும் யூடியூப் சேனல்” St. Joseph’s Convent, நாகர்கோயில் ” எனும் தலைப்பில் முழுமையான 7 நிமிட வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது.
நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் எனும் பெண்களுக்கான பள்ளி 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அப்பள்ளியில் நிகழ்ந்த மதம் சார்ந்த இந்நிகழ்ச்சி குறித்து 2013-ம் ஆண்டிலேயே யூடியூப் உள்ளிட்டவையில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், தமிழக அரசு பள்ளியில் மதமாற்றம் என பரப்பப்படும் வீடியோ தவறானது. அது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியானது என்றும், அந்த வீடியோ நாகர்கோவில் செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் எடுக்கப்பட்டது என்றும் அறிய முடிகிறது.