5,720 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என அதிமுக ஆட்சியில் வந்த அறிக்கையைப் பரப்பும் அதிமுகவினர் !

பரவிய செய்தி

5,720 அரசு பள்ளிகளில் கழிப்பிடமோ வகுப்பறைகளோ இல்லை ! எது முக்கியம் செத்தவர் பேனாவுக்கு சிலையா ஏழை குழந்தைகளின் இலவச கல்வியா !

Archive Link

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் 5720 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத நேரத்தில் கருணாநிதிக்கு ஏன் 80 கோடி செலவில் பேனா சிலை வைக்கிறீர்கள் எனத் திமுக ஆட்சியை அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு ஆதாரமாகத் தி இந்து நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா ட்விட்டரில் பதிவிட்ட பதிவை அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் ராஜ் சத்யன் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ?

தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவாக அவரின் சமாதி அருகே கடலுக்குள் 80 கோடி ரூபாய் செலவில் பேனா சிலை வைக்கப்போவதாக  தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்க்கட்சியினர் மற்றும் சூழலியல் நிபுணர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், 5720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லாத நேரத்தில் எதற்கு 80 கோடி செலவில் ஒரு பேனா சிலை எனத் தி இந்து நாளிதழின் ஒரு கட்டுரையைப் பகிர்ந்து அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

அதிமுகவினர் பகிர்ந்த தி இந்து நாளிதழ் கட்டுரை குறித்து இணையத்தில் தேடியபோது அது 2014ல் வெளிவந்த கட்டுரை எனத் தெரியவந்தது. 2014 ஆகஸ்ட் 12ம் தேதி ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறித்து Report on toilets in Tamil Nadu govt. schools sparks political row எனும் தலைப்பில் தி இந்து நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள 37,002 அரசு பள்ளிகளில் 1442 மகளிர் பள்ளி மற்றும் 4278 ஆண்கள் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை என அதில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் சட்டமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

தமிழக அரசு பள்ளிகளில் தற்போது உள்ள நிலவரம் குறித்து தேடியபோது, 2020-21 பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட Report on UNIFIED DISTRICT INFORMATION SYSTEM FOR EDUCATION PLUS(UDISE+) 2020-21 எனும் அறிக்கையில் தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

2020-21 அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 36,966 அரசு ஆண்கள் பள்ளிகளில் 36,276(98.13%) பள்ளியில் கழிப்பறை வசதிகள் இருப்பதாகவும், அதில் 35,816(96.89%) பள்ளியில் கழிப்பறைகள் உபயோகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 37,211 அரசு மகளிர் பள்ளிகளில் 37,066(99.61%) பள்ளியில் கழிப்பறை வசதிகள் இருப்பதாகவும், அதில் 36,968(99.35%) பள்ளியில் கழிப்பறைகள் உபயோகத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதிமுகவின் விந்தியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு செய்திகளை பதிவிட்டிருந்தார். 5,720 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என 2014ல் தி இந்து நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியையும், 2022ல் ஜூன் மாதம் Inadequate classrooms, toilets at 110-year-old govt. girls’ school in Erode, a cause for concern எனும் தலைப்பில் ஈரோட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஒரு அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனப் புகார் எழுந்தது தொடர்பாக தி இந்து நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியையும் ஒன்றாக இணைத்து தவறாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க : காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி, அதிமுக ஆட்சியில் வந்த செய்தியை திமுக எனப் பரப்பி வருகிறார்கள் !

மேலும் படிக்க : எல்.இ.டி பல்பு வாங்கியதில் 1 கோடி மோசடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சி என வதந்தி !

மேலும் படிக்க : மாநகராட்சியில் வாகன ரிப்பேர் செலவு ரூ51.64 கோடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக எனப் பரப்பும் அதிமுக, பாஜகவினர்.

இதற்கு முன்பாகவும், அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் புகார் உள்ளிட்ட சம்பவங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக தவறாகப் பரப்பி இருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், தமிழகத்தில் 5720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லாத நேரத்தில் 80 கோடி செலவில் எதற்குப் பேனா வடிவில் சிலை என அதிமுகவினரால் பகிரப்படும் தரவுகள் 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெளிவந்தது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader